பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் என்றும், அதற்கமைய நாட்டின் சட்டக்கட்டமைப்பில் படிந்திருக்கும் கரும்புள்ளியை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சட்டத்தரணிகளுக்கான சட்டத்தரணிகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
அதுகுறித்து சட்டத்தரணிகளுக்கான சட்டத்தரணிகள் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
தற்காலிக சட்டமாகக் கொண்டு வரப்பட்டு, பின்னர் நிரந்தர சட்டமாக்கப்பட்ட 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்கப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குமாறு அண்மையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.
இந்தச் சட்டத்தின் சில சரத்துக்கள் நாட்டின் அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலும் ஜனநாயகத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் மதிப்பளிக்கின்ற நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரகடனங்களுக்கு முரணான வகையிலும் அமைந்துள்ளன.
இருப்பினும் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் நாட்டின் தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டும் முன்னெடுக்கப்படும் சட்ட உருவாக்கங்களில் தலையீடு செய்யும் அதிகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இல்லை என்று ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா தெரிவித்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் குறித்து நாம் ஆச்சரியமடைகின்றோம்.
1996 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச்சட்டத்தின் 10(சி) பிரிவின் ஊடாக புதிய சட்ட உருவாக்கப்பணிகளிலும் நிர்வாக செயற்பாடுகளிலும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தலிலும் ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கும் அதிகாரம் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று அச்சட்டத்தின் 10(டி) பிரிவு, தேசிய சட்ட உருவாக்கம் மற்றும் நிர்வாக செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கத்திற்குப் பரிந்துரைகளை வழங்கும் அதிகாரத்தை ஆணைக்குழுவிற்கு வழங்கியுள்ளது.
அதுமாத்திரமன்றி 21 ஆம் இலக்க மனித உரிமைகள் ஆணைக்குழுச்சட்டத்தின் 10(இ) பிரிவின்படி, மனித உரிமைகள்சார் விடயத்தில் அரசாங்கம் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளை வழங்கும் அதிகாரம் ஆணைக்குழுவிற்கு உள்ளது. அந்தவகையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவானது அதற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குமாறும் பயங்கரவாதத்தைக் கையாள்வதற்கான சட்டத்தை நாட்டின் பொதுச்சட்டத்தின் கீழ் கொண்டு வருமாறும் வலியுறுத்தியிருந்தது.
பயங்கரவாதத்தடைச்சட்டம் என்ற போர்வையில் மக்களின் அடிப்படை உரிமைகளையும் மனித உரிமைகளையும் மீறும் வகையிலான அரசின் செயற்பாடுகள் மற்றும் சம்பவங்கள் தொடர்பில் தாம் கொண்டிருக்கும் அனுபவங்களின் அடிப்படையிலேயே ஆணைக்குழு மேற்குறிப்பிட்டவாறான வலியுறுத்தலை மேற்கொண்டிருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. எனவே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு மதிப்பளிக்குமாறும் எமது சட்டக்கட்டமைப்பில் படிந்திருக்கும் கரும்புள்ளியை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.