மீண்டும் தென்னிலங்கை அரசியலுக்கான இந்தியாவின் தேசிய புலனாய்வு நிறுவனம் இலங்கை புலனாய்வு கட்டமைப்புக்களுடன் புலி பூச்சாண்டியை காண்பிக்க தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு லட்சத்தீவில் இருந்து இலங்கை மீன்பிடி கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருட்கள் புலிகளால் கடத்தப்படுவதாக கதைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
போதை பொருள் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுரேஸ் ராஜ் மற்றும் சௌந்தரராஜன் என அடையாளம் காணப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் பின்னர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள்
என்று கண்டறியப்பட்டதாக இந்திய உளவு அமைப்பின் முகவர் ஊடகமான இந்து செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு, இலங்கை மற்றும் பிற வெளிநாடுகளில் அமைந்துள்ள அமைப்புகளின் தலைவர்களின் மேற்பார்வையின் கீழ் புலிகளின் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல அவர்கள் ரகசியமாக வேலை செய்து வந்ததாகவும் புதிய கதைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
இந்திய கடலோர காவல்படையினர் கடந்த ஆண்டு மார்ச் 18 அன்று அரபிக்கடலில் இலங்கை மீன்பிடி கப்பலான ரவிஹன்சியை தடுத்து நிறுத்தி, ஏராளமான போதை மருந்துகள், ஐந்து ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் 1,000 மிமீ வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர். இந்த நிறுவனம் ஆறு இலங்கை பிரஜைகளையும் கைது செய்தது.