அமெரிக்கா அளிக்கவிருக்கும் அதி நவீன ராக்கெட்டுகளால் தங்கள் மீது தாக்குதல் முன்னெடுத்தால் கடும் எதிர்விளைவுகளை மேற்கத்திய நாடுகள் எதிர்கொள்ள நேரிடும் என ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது. உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை அனுப்ப முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த வாரம் அறிவித்திருந்தார். உக்ரைனுக்கு அதி நவீன ஆயுதங்களை தற்போதைய சூழலில் அமெரிக்கா வழங்காது என முன்னர் அறிவித்திருந்ததற்கு மாறாக ஜோ பைடன் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையிலேயே, ரஷ்யாவின் முன்னாள் பிரதமரும், தற்போதைய தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவருமான டிமித்ரி மெத்வெதேவ் இந்த விவகாரம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்ய மண்ணில் அமெரிக்க ஆயுதங்களால் தாக்குதல் முன்னெடுத்தால் அதனால் கடுமையான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார் அவர்.
அமெரிக்கா அளிக்கும் ஆயுதங்களால் ரஷ்ய பகுதிகளில் உக்ரைன் தாக்குதல் முன்னெடுத்தால், எங்களுக்கு வேறு வழியில்லை, தகுந்த பதிலடி தருவோம் என்றார்.
உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கும் நாடுகளால் உண்மையில் அணு ஆயுத போர் வெடிக்கும் சூழல் தான் உருவாகியுள்ளது என்றார் டிமித்ரி மெத்வெதேவ்.
அமெரிக்கா அளிக்கவிருக்கும் அதி நவீன ராக்கெட்டுகளால் 50 மைல்கள் தொலைவில் எதிரிகளை தாக்கி அழிக்க முடியும். இந்த ஆயுதங்களால் உக்ரைன் இராணுவத்தின் பலம் அதிகரிக்கும் என்றே ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ரஷ்யா பிராந்தியங்கள் மீது தாக்கும் நோக்கம் உக்ரைனுக்கு இல்லை எனவும், தங்கள் மண்ணை காப்பது தான் தங்களின் கடமை எனவும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.