முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கை தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் பங்குகொள்ளும் சட்டத்தரணிகளுக்கு சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கை தொடர்பிலான வழக்கு நேற்று ( 31.08.2023) வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதிமன்று நீதவான் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற போதே சட்டத்தரணிகளால் நீதிமன்றுக்கு இவ்விடயம் குறித்துத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் குறித்து ஆராய்வதற்காக கடந்த (10.08.2023) அன்று புதைகுழி கண்டு பிடிக்கப்பட்ட இடத்திற்கு சட்டத்தரணிகள் கள விஜயம் மேற் கொண்டிருந்தனர்.
அவ்வாறு அங்கு சென்றவர்கள் குறித்தே புலனாய்வாளர்களால் அப்பகுதி கிராம சேவையாளரிடம் அவர்கள் குறித்த பெயர் விபரங்கள் கோரப்பட்டுள்ளன.
அத்துடன் அவர்கள் பயணித்த வாகனங்களின் இலக்கத் தகடுகளின் இலக்கங்கள் குறித்தும் கோரப்பட்டதாக கிராம சேவையாளரால் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் குறித்த மனிதப் புதைகுழி குறித்த வழக்கு நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் குறித்து முல்லைத்தீவு சிறீலங்கா காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்யுமாறு சட்டத்தரணிகளுக்கு நீதவானால் உத்தரவிடப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.