களுவாஞ்சிகுடி – கல்முனை பிரதான வீதியில், கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
களுவாஞ்சிகுடியை நோக்கி அதிவேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம நின்ற சிறுவர்கள் மீதும், வீதியைக் கடக்க முயன்றவர்கள் மீதும் மோதியதாகப் சிறீலங்கா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த 17 வயதுடைய ஜெகநாதன் கிஷோர் என்ற சிறுவனே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் வீதியைக் கடப்பதற்காகச் சம்பவ தினமான நேற்று இரவு 9:30 மணியளவில் சிறுவர்கள் நின்றுகொண்டிருந்தபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் மற்றும் அதில் பயணித்தவர், வீதியோரத்தில் நின்ற சிறுவர்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுவாஞ்சிகுடிப் சிறீலங்கா போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






