யாழ்பாணத்தில் எகிறிப்பாயும் கொரோனா 733 ஆக உயர்வு!

You are currently viewing யாழ்பாணத்தில் எகிறிப்பாயும் கொரோனா 733 ஆக உயர்வு!

யாழில் உருவாகியுள்ள சந்தைக் கொத்தணியின் தீவிர பரம்பல் காரணமாக ஒரே மாதத்தில் அதிகூடிய தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து யாழ். மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 733 ஆக அதிகரித்துள்ளது.

மார்ச் மாதம் 01-31 வரையான காலத்தில் 561 தொற்றாளர்கள் யாழ் குடா நாட்டில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் திணைக்கள தரப்பின் தகவல்களின் அடிப்படையில் தெரியவருகிறது.

இதையடுத்து 2021ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்கள் வரையான காலப்பகுதியில் யாழ். குடாநாட்டில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 733 ஆகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டின் முதலிரண்டு மாதங்களில் மட்டும் 172 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் மார்ச் மாத்தில் இதுவரை காலத்தில் இல்லாத வகையில் அதிகூடிய தொற்று பதிவாக 561 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு காரணமாக யாழ். குடாநாட்டில் புதிதாக உருவாகியிருக்கும் உப கொத்தணிகளே காரணமாக அமைகின்றது.

குறிப்பாக யாழ். நவீன சந்தை, திருநெல்வேலி பொதுச் சந்தை கொத்தணி பரம்பல் மிகப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

அத்துடன் யாழ். போதனா வைத்தியசாலை கொத்தணியிலும் தொடர்ந்து தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தற்போது சந்தைக் கொத்தணியில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் முதலாவது தொடர்பாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தவர்களிடம் இரண்டாவது தடவை பரிசோதனை மேற்கொள்ளப்படும் போது தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்தனர்.

ஆகவே, யாழ். குடா நாட்டு மக்கள் அநாவசிய பயணங்களையும், ஒன்று கூடல்களையும் தவிர்ப்பதுடன், சுகாதார-பாதுகாப்பு நடைமுறைகளை பேணுமாறும் சுகாதாரத் தரப்பினரால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

மேற்குறித்த தரவுகள் கடந்த நாடக்ளில் வடமாகாண சுகாதாரத் திணைக்கள பணிப்பாளர் மற்றும் மாவட்ட செயலர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள