பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்கு காணி சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு நட்ட ஈட்டுத் தொகை வழங்குவதற்காக விசாரணை மற்றும் பதிவு செய்யும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை(26.01.2023) காலை-10 மணி தொடக்கம் யாழ்.தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தின் காணி பிரிவில் இடம்பெற்றது.
2303/15 மற்றும் 2310/45 இலக்க வர்த்தமானிப் பத்திரிகையில் 26.10.2022 மற்றும் 16.12.2022 அன்று பிரசுரிக்கப்பட்ட காணி எடுத்தல் சட்டம் பிரிவின் 7 ஆம் பிரிவின் கீழான அறிவித்தலின் பிரகாரம் காணிச் சுவீகரிப்புக்கு உள்ளான அனைவரும் தாமாக அல்லது எழுத்து மூலம் அதிகாரமளிக்கப்பட்ட நபர் மூலம் இதுதொடர்பான விசாரணைக்காக சம்பந்தப்பட்ட காணி உரிமையாளர்களுக்கான கடிதம் ஏற்கனவே அனுப்பப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஜே- 240, ஜே-246, ஜே-256,ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் காணியின் உரிமைகளை ஒப்புவிக்கும் உறுதி, ஆவணங்களுடன் வருகை தந்து ஆர்வத்துடன் பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமையைக் காண முடிந்தது.