‘ராஜபக்சேவை தமிழர்களின் ஆன்மா சும்மா விடாது’ – டி.ராஜேந்தர் ஆவேசம்!

You are currently viewing ‘ராஜபக்சேவை தமிழர்களின் ஆன்மா சும்மா விடாது’ – டி.ராஜேந்தர் ஆவேசம்!

இலங்கையில் ராஜபக்சேவின் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது என நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் ஆவேசமாக கண்டித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் இலங்கை தவித்து வரும் நிலையில், ராஜபக்சேவை கண்டித்து இயக்குனர் டி.ராஜேந்தர் பாடல் ஒன்றை பாடியுள்ளார். அதனை வெளியிட பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய அவர், இலங்கை மக்கள் படும் துயரத்தை எண்ணி ஆவேசமாக ராஜபக்சேவை கண்டித்து பேசினார்.

அவர் பேசும்போது, ‘நாங்கள் கோரிக்கை வைத்ததை ஏற்று இந்திய அரசு 1.9 பில்லியன் டொலர்களை இலங்கை மக்களுக்காக கொடுத்தது. அதன் பின்னர் மீண்டும் 2 பில்லியன் டொலர்களை கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறது. அது மட்டுமின்றி 40 ஆயிரம் டன் அரிசி இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இப்போது மீண்டும் அரிசியை அங்கு அனுப்புவதற்கு இந்திய அரசு தயாராக இருக்கிறது.

இந்த இலங்கை வாழ் மக்களுக்காக, அவர்களின் நலனுக்காக, மனிதநேயத்திற்காக, அங்கு வாழும் தமிழ் மக்களுக்காக மட்டும் அல்ல, சிங்கள மக்களுக்காகவும் அவர்கள் சிந்தும் கண்ணீரைப் பார்த்து விட்டு இந்திய அரசு உதவி செய்திருக்கிறது. இலங்கையில் போராட்டம் வலுத்துக்கொண்டிருக்கிறது. அதனை மையப்படுத்தி ‘நாங்கள் வாழணுமா சாகணுமா சொல்லுங்க’ என்ற பாட்டை இலங்கை வாழ் கவிஞன் அஸ்வின் எழுதியிருக்கிறார். என்னுடைய குரலில் அந்த பாடலை இலங்கை மக்களுக்காக பாடியிருக்கிறேன். ஏன் இந்த பாட்டு என்றால், இலங்கையில் அவ்வளவு பெரிய போராட்டம் நடக்கிறது.

பால் கிடைக்காமல் குழந்தைகள் பட்டினியாக கிடக்கின்றனர். ஒரு லிட்டர் பால் 1200 ரூபாய், ஒரு கிலோ கோழி கறி 1000 ரூபாய், பெட்ரோல் விலை 350 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மக்கள் எவரிடமும் கையில் பணம் இல்லை. 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்தது ஒரு படுகொலை. இதே ராஜபக்சே ஆட்சியில் சமாதானக் கொடியை காட்டிக் கொண்டு வந்த கிட்டத்தட்ட 40 ஆயிரம் தமிழர்களை வெட்டி சாய்த்தார்கள், குண்டு போட்டு கொன்று குவித்தார்கள். அவர்களின் ஆன்மா சும்மா விடுமா? ராஜபக்சே நீ ஆடிய ஆட்டத்திற்கு 2022யில் உன் ஆட்சி ஆட்டம் ஆடுகிறது.

சிங்கள மக்களின் இனவாத ஓட்டுக்களை பெற்றுவிட்டோம் என்று கொக்கரித்தாரே ராஜபக்சே, என்ன ஆயிற்று உங்களின் இனவெறி? 69 லட்சம் மக்கள் உங்களுக்கு ஒட்டு போட்டார்கள், ஆனால் அவர்களுக்கு நீங்கள் வேட்டு வைத்துவிட்டீர்கள். அதை வைத்து தான் நங்கள் இன்று பாட்டு போட்டிருக்கிறோம் .

இலங்கையை பற்றி கூறவேண்டும் என்றால் ஈழமே! என் இதயமே..! யாழ்ப்பாணமே என் கானமே.. உனக்கு யார் செய்தார்கள் இந்த துரோகமே? ஏன் இப்படி ஆகிவிட்டாய் சோகமே?.

நாட்டை விட்டு விரட்ட வேண்டும் அந்த பணவெறி பிடித்த இனவெறி பிடித்த விலங்கை. நீ மகிந்த ராஜபக்சே இல்லை, ஆட்சி கவிழ்ந்த ராஜபக்ச. இதுபோன்ற கொடுங்கோல் ஆட்சி இலங்கையில் இனி தொடரக் கூடாது என இறைவன் இடத்தில் கோரிக்கை வைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments