றுவாண்டா இனப் படுகொலையை தடுக்கத் தவறிய பொறுப்பை ஏற்ற மக்ரோன்!

You are currently viewing றுவாண்டா இனப் படுகொலையை தடுக்கத் தவறிய பொறுப்பை ஏற்ற மக்ரோன்!

பிரான்ஸின் அதிபர் எமானுவல் மக்ரோன் றுவாண்டாவுக்கு விஜயம் செய்துள்ளார். கடந்த இருபது வருட காலத்தில் அங்கு சென்றுள்ள முதலாவது பிரெஞ்சுத் தலைவர் அவரே ஆவார்.

தலைநகர் கிகாலியில் இன்று நிகழ்த்திய முக்கியத்துவம் மிக்க உரையில், 1994 இல் அங்கு நிகழ்ந்த இனப்படுகொலை யில் பிரான்ஸுக்கு உள்ள “பொறுப்புகளை”( responsabilités) ஏற்றுக்கொண்டார். ஆனால் படுகொலைகளில் பிரான்ஸுக்கு நேரடியான பங்கு(“complicity”) இருப்பதை மறுத்த அவர், தனது நாட்டுக்குள்ள பொறுப்புக்களை அங்கீகரிப்பதற்காகவே இங்கு வந்துள்ளேன்” என்று அறிவித்தார்.

வெளிப்படையாக மன்னிப்புக் கோரு வதைத் தவிர்த்த அவர் “எங்களுக்கு நாங்களே மன்னிப்பைப் (forgive) பரிசளிப்போம்” என்று கூறி பிரான்ஸின் வருத்தத்தை வெளியிட்டார்.

படுகொலைகள் நிகழ இருப்பதைத் தெரிந்துகொண்டும் பிரான்ஸ் அதனைத் தடுக்கத் தவறியது என்பதையும் அந்த உண்மையைப் பரிசோதிப்பதில் நீண்ட காலம் நீடித்த “மௌனம்” றுவாண்டா மக்களுக்கு மேலும் துன்பங்களைக் கொடுத்தது என்றும் மக்ரோன் ஒப்புக் கொண்டார்.

“படுகொலையில் ஒரு பங்காளியாக இல்லாவிடினும் றுவாண்டாவில் பிரான் ஸுக்கு ஒரு முக்கிய பாத்திரமும், சரிதமும்,அரசியல் பொறுப்புகளும் இருக்கின்றன. எனவே அதற்கான ஒரு கடமை இருக்கிறது. வரலாற்றுக்கு முகம் கொடுப்பதும் றுவாண்டா மக்களுக்கு அது ஏற்படுத்திய வலிகளின் அளவை அங்கீகரிப்பதும் அந்தக் கடமை ஆகும் “-என்று மக்ரோன் தனது உரையில் குறிப்பிட்டார்.

படுகொலைகள் நிகழ்ந்து 27 ஆண்டு ளுக்குப் பிறகு றுவாண்டா சென்றுள்ள அதிபர் மக்ரோன் அங்கு தலைநகரில் Gisozi என்னும் பகுதியில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் பேரது எச்சங்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்ற நினைவிடத்தில் (Genocide Memorial) அந்நாட்டின் அதிபர் போல் கஹமேயுடன் (Paul Kagame) சேர்ந்து அஞ்சலி செலுத்தினார். பிறகு அங்கு உரை நிகழ்த்தி னார்.

சமீப வரலாற்றில் உலகை உலுக்கிய றுவாண்டா இனப்படுகொலைகளில் பிரான்ஸின் பங்கு என்ன என்பது தொடர்பில் நீடித்துவருகின்ற சர்ச்சை ளுக்கு மத்தியில் கொலைகள் நடந்த மண்ணில் பிரெஞ்சு அரசுத் தலைவர் ஆற்றிய உரை முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால் சுமார் எட்டு லட்சம் துட்சி மக்களது படுகொலைகளைத் தடுப்பதில் அன்றைய பிரான்ஷூவா மித்ரோன்அரசு இழைத்த தவறுக்காக பிரான்ஸின் உத்தியோகபூர்வ ரீதியான ஒரு மன்னிப்பு வார்த்தையைப் படுகொலையில் உயிர்தப்பிய சிலர் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

அவர்களுக்கு மக்ரோனின் இன்றைய உரை ஏமாற்றமாக அமைந்திருக்கிறது.எனினும் மக்ரோனின் வார்த்தைகள்“மன்னிப்பைக் காட்டிலும் மதிப்பு மிக்கவை” என்று றுவாண்டா அதிபர்போல் கமஹே வரவேற்றுள்ளார். பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட அவரதுசெயல் துணிகரமானது என்றும் கமஹே குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸின் அரசுத் தலைவர் ஒருவர் 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் றுவாண் டாவுக்கு விஜயம் செய்வது இதுவே முதல் முறையாகும். அங்கு நிகழ்ந்த கொடூர இனப்படுகொலை சம்பந்தமாகக் கடந்த மார்ச்சிலும் ஏப்பிரலிலும் வெளியாகிய இரண்டு விசாரணை அறிக்கைகளின் முடிவுகளே மக்ரோனின் முக்கியத்துவம் வாய்ந்த கிகாலி விஜயத்துக்கு வழியேற் படுத்தியது.

1994 இல் றுவாண்டாவில் படுகொலை க்கு முன்னரும் பின்னரும் அது நிகழ்ந்த போதும் பிரான்ஸ் வகித்த பங்கு என்ன என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அதிபர் மக்ரோன் நியமித்த வரலாறுத்துறை நிபுணர்கள் அடங்கிய விசேட குழு அதன் ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த ஏப்ரலில் எலிஸே மாளிகையிடம் கையளித்திருந்தது.

துட்சி இனப்படுகொலையில் பிரான்ஸுக்கு நேரடியான பங்கில்லாவிடினும் தீவிரமான பெரும் பொறுப்பு(heavy and overwhelming responsibilities) இருக்கிறது என்றும்-இனவாதமும் ஊழலும் மிகுந்த ஹுட்டு இன அதிபர் ஜுவனல் ஹபரிமானாவின் அரசுக்கு “அரசியல்” வழிமுறைகளில் “கண்மூடித்தனமாக” வழங்கியஆதரவின் மூலம் பிரான்ஸ் படுகொலைகளுக்கான பொறுப்பைச் சுமப்பதாகவும் அந்த அறிக்கை தீர்ப்பளி த்திருந்தது.

100 நாட்களில் சுமார் எட்டு லட்சம் துட்சி இன மக்கள் படுகொலை செய்யப்பட்ட சமயத்தில் பிரான்ஸில் ஆட்சியில் இருந்த அதிபர் பிரான்ஷூவா மித்ரோ னின் றுவாண்டா தொடர்பான கொள்கை களை அந்த அறிக்கை தத்துவரீதியில் “குருட்டுத்தனமானது” (ideologically blind) என்று குறிப்பிட்டிருந்தது.

ஆபிரிக்க நாடான றுவாண்டாவில் 1994 இல் எட்டு லட்சம் துட்சி இன மக்கள் வெட்டிக் கொன்று குவிக்கப்பட்ட பெரும் படுகொலைக்களுக்குப் பிறகு பிரான் ஸுக்கும் அந்த நாட்டுக்கும் இடையிலான உறவுகள் முறிந்தன.படுகொலைகள் நிகழ்ந்த சமயம் பிரான்ஸில் அதிகாரத் தில் இருந்த அதிபர் பிரான்ஷூவா மித்ரோனின் அரசு துட்சி மக்களைப்படுகொலை செய்த ஹுட்டு இன ஆட்சியாளர்களுக்கு ஆதரவளித்து வந்தது.இதனால் படுகொலைகளில் பிரான்ஸுக்கும்  பங்கு உள்ளது என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ளது.

ஆனால் பிரான்ஸ் தனது பங்கு பற்றித் தொடர்ந்தும் மௌனமாக இருந்து வந்தது. படுகொலைகளுக்காக மன்னிப் புக் கோர வேண்டும் என்று விடுக்கப்பட்டு வந்த வேண்டுகோள்களுக்கும் அது செவிசாய்க்கவில்லை.

றுவாண்டா படுகொலைகளை இனப்படுகொலையாக உலகம் அங்கீகரித்த போதிலும் அதில் பிரான்ஸின் பங்கு என்னஎன்ற கேள்வி சர்ச்சைக்குரிய ஒன்றாகஇருந்து வருகிறது. இந்த நிலையில்அதிபர் மக்ரோன் பதவிக்கு வந்த பிறகு றுவாண்டாவுடனான  உறவையும் இரு தரப்பு நம்பிக்கைகளையும் மீளவும்கட்டியெழுப்புவதற்காகப் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தார். அவற்றில் ஏற்பட்ட முன்னேற்றங்களே அவரது தற்போதைய விஜயத்துக்கான பாதையைத்
திறந்தது.

இரு நாடுகளுக்கும் இடையே கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்து வருகின்ற பதற்றமான ராஜீக உறவில் ஒரு புதிய திருப்பமான அத்தியாயமாக மக்ரோனின் விஜயம் அமையும் என்று நம்பப்படுகிறது. கடந்த 2015 முதல் அங்கு வெற்றிடமாக உள்ள பிரெஞ்சுத் தூதரின் பதவியை மீள நியமிப்பதற்கான பேச்சுக்களிலும் அவர் அங்கு ஈடுபட்டார்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply