வட்டுவாகலில் கடற்படைக்கு 617 ஏக்கர் காணிகளை அபகரிக்க மீண்டும் நடவடிக்கை!

You are currently viewing வட்டுவாகலில் கடற்படைக்கு 617 ஏக்கர் காணிகளை அபகரிக்க மீண்டும் நடவடிக்கை!

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவை பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அங்கு நிலைகொண்டு அமைக்கப்பட்டிருக்கும் வட்டுவாகல் கோட்டாபாய கடற்படை முகாமுக்கு சுவீகரிக்கத் மீண்டும் திட்டமிடப்பட்டுள்ளது.

2017ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வௌியாகிய வர்த்தமானியின் பிரகாரம் கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலுள்ள 271.62 ஹெக்டெயர் விஸ்தீரனமுடைய காணி கையகப்படுத்தப்பட்டுள்ளது என வர்த்தமானி வெளியாகி நில அளவீடு செய்யும் நடவடிக்கை நிலஅளவை திணைக்களத்தால் முன்னெடுக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த வருடங்களில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள், மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தினை நடத்தியதை தொடர்ந்து நில அளவீட்டுபணிகள் கைவிடப்பட்டுள்ளதுடன் நில அளவைத்திணைக்களத்தின் வாகனம் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன்,எம்.சிவாஜிலிங்கம் ஆகியோர் உள்ளிட்ட பலர் மீது வழக்கு தொடரப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றில் வழங்கு நடைபெற்று வருகின்றது.

இன்னிலையில் கடந்த 08.07.2021 அன்று திகதியிடப்பட்ட கடிதம் முல்லைத்தீவு பிரதேச நில அளவைத் திணைக்களத்தின் அரச நில அளவையாளர் பா.நவஜீவனால் காணி உரிமையாளர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

2021 – 05 – 12ஆம் திகதியன்று முல்லைத்தீவு அரசாங்க அதிபர் மற்றும் கரைதுரைப்பற்று பிரதே செயலாளர்களுடனான கலந்துரையாடலின் அடிப்படையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நில அளவையானது காணி எடுத்தற் சட்டம் (அத்தியாயம் 450) 05 ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் பிரகாரம் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கட்டளை நிமித்தம் நில அளவை நாயகத்தால் அளிக்கப்பட்ட கட்டளையின் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவின் முள்ளிவாய்க்கால் கிராமத்தில் அமைந்துள்ள காணியினை பிரதான கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் பொருட்டு நிலஅளவை செய்வதற்காக 2021 – 07 29 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு வருகை தந்து தங்கள் காணிகளின் எல்லைகளையும் விபரங்களையும் இனங்காட்டும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

மேலும் தங்களினது காணியினை உறுதிப்படுத்தும் ஆவணத்தையும் ஆவணத்தின் பிரதி ஒன்றையும் எடுத்துவரும்படியும் கேட்டுக்கொள்கிறேன். என அந்த கடிதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply