முல்லைத்தீவு மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் மனித எச்சங்கள் (எலும்புகள்) சில இன்று, புதன்கிழமை, கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டடமொன்று கட்டுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கட்டடம் கட்டும் பணிகள் இடம்பெற்றுவரும் பகுதியில் கண்ணிவெடிகள் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக புனர்வாழ்வு வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட நிலையில் குறித்த வைத்தியசாலை கட்டடங்களை அமைப்பதற்காக குறித்த காணி துப்புரவு பணிகள் இடம்பெற்று வந்தன. இதன்போது அங்கு கண்ணிவெடிகள் இருப்பதாக தெரிவித்து அந்த பகுதி மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களினால் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த காணியின் ஒரு பகுதியில் மனித எச்சங்கள் காணப்பட்டதை அவதானித்த பணியாளர்கள் மாங்குளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
மாங்குளம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த விடயம் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்று காலை குறித்த இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமார் அவர்கள் குறித்த இடத்தை பார்வையிட்டார். குறித்த இடத்தை பார்வையிட்ட நீதிபதி குறித்த இடத்தின் ஆரம்பகால வரலாறு தொடர்பாகவும் இந்த விடயம் தொடர்பான வரலாறுகளை ஆராயுமாறு மாங்குளம் காவல்துறையினருக்கு உத்தரவு வழங்கியதோடு நாளைய தினம் குறித்த பகுதியை அகழ்வு பணிகள் மேற்கொள்வதற்கும் உத்தரவிட்டுள்ளார்.