வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது! – சுமந்திரனின் சூழ்ச்சி குறித்து சம்பந்தனுக்கு கடிதம்.

You are currently viewing வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது! – சுமந்திரனின் சூழ்ச்சி குறித்து சம்பந்தனுக்கு கடிதம்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாட்டை தனது பிடிக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து விதமான சூழ்ச்சிகளையும் சுமந்திரன் முன்னெடுப்பதாக சட்டத்தரணி கே.வி.தவராசா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு கடந்த 20 ஆம் திகதி எழுதியுள்ள கடிதத்தில் அவர், சுமந்திரனின் அரசியல் நகர்வுகள் மற்றும் சம்பந்தனை அரசியலுக்குள் கொண்டு வந்த பின்னர் அவரை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக தெரிவித்த கருத்து தொடர்பாக மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அவர் அனுப்பிய கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நீங்கள் வளர்த்த கடா உங்கள் மீது பாய்ந்துவிட்டது.

திரு ஆப்பிரஹாம் சுமந்திரன் அவர்களின் தன்னிச்சையான முடிவுகளால் தமிழ் தேசியம் தேய்ந்து கட்சிக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக கடந்த காலத்தில் நான் உங்களுக்கு பல கடிதங்களை எழுதியிருந்தேன். ஆனால் துரதிஷ்ட வசமாக நீங்கள் அவரின் மீது எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்காமையின் விளைவுகளைத்தான் இப்போது பகிரங்கமாக காணக் கிடைக்கின்றது.

தகைமையுள்ள பல்வேறு தமிழ் தேசிய ஆளுமைகள் இருக்கத் தக்கதாக நீங்கள் 2010ஆம் ஆண்டு ஆப்ரிகாம் சுமந்திரனை தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக்கி அரசியல் முகவரி கொடுத்தீர்கள்.

ஆனால் இப்போது அரசியல் ரீதியில் உங்களை ஓரங்கட்டிவிட்டு கட்சியின் மொத்தக் கட்டுப்பாட்டையும் தனது பிடிக்குள் கொண்டு வருவதற்கான அனைத்துவிதமான சூழ்ச்சிகளையும் முன்னெடுக்கின்றார்.

வேடிக்கையான சுமந்திரனின் கருத்து

2015 தேர்தலுக்குப் பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்காவிட்டால் தான் அரசியலை விட்டும் விலகப் போவதாகக் கூறிய சுமந்திரன் இப்போது உங்களைப் பதவி விலகச் சொல்வது வேடிக்கையானது.

இரா.சம்பந்தன் அவர்களே! தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் நீங்கள். தமிழ் தேசியத்தின் பால் நீங்கள் கொண்டிருந்த பற்றுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை உங்களுக்கு அளிக்கச் செய்தது. கடினமான கால கட்டங்களில் நீங்கள் நாம் திருப்தியுறும் வகையில் வழிநடாத்தினீர்கள்.

உள்நோக்கம் கொண்ட ஒரு செயற்பாடு

இப்போது உங்களின் ஆளுமைத் தளத்தை படுகொலை செய்யும் வகையில் உங்களை அவமதித்து ‘முதுமை காரணமாக செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் இரா.சம்பந்தன். உடனடியாகப் பதவி விலக வேண்டும்’ என்ற தனது தனிப்பட்ட கருத்தை தனியார் ஊடகமொன்றில் பகிரங்கமாகக் கூறி, 288 நாடாளுமன்ற நாட்களில் வெறும் 39 நாட்கள் மட்டுமே சமூகமளித்த உங்களுக்கு நான்கு மில்லியன் ரூபாய் தொலைபேசி, எரிபொருள் வாகனம் போன்றவற்றுக்காக வழங்கப்பட்டுள்ளதாக தகவலறியும் சட்டத்துக்கமைய பெறப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அளிக்கப்படும் சிறப்புரிமையைக் கூட கேள்விக்குட்படுத்திய சுமந்திரனின் நாகரீகமற்ற கூற்று பற்றியும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உங்களை பதவி விலகச் சொல்லி நிர்ப்பந்திப்பதும், அல்லாதவிடத்து அதற்காக நடவடிக்கை எடுக்கப் போவதாகச் சொல்லியிருப்பது உள்நோக்கம் கொண்ட ஒரு செயற்பாடாகும்.

தமிழ் தேசிய அரசியல் இது உங்களை அவமானப்படுத்தியது மட்டுமல்ல தமிழ் தேசிய அரசியலுக்கான உங்களின் உழைப்பைக் கொச்சைப்படுத்துவதுடன் அது தமிழ் அரசுக்கட்சியையும் இழிந்துரைக்கும் செயற்பாடுமாகும்.

எனவே விரைவாக இதற்கு தகுந்த நடவடிக்கையை நீங்கள் எடுக்க வேண்டும் என்பதே தமிழ்தேசியவாதிகளின் எதிர்பார்ப்பாகும். நீங்கள் வளர்த்த கடா பகிரங்கமாக பொதுவெளியில் வைத்து உங்களின் மார்பில் பாய்ந்துவிட்டது.

தனிமைப்படுத்தப்பட்ட தமிழரசுக்கட்சி

தின்னை எப்போது காலியாகும் என்ற அவரது எதிர்பார்ப்பு பகிரங்கமாகவே வெளிப்பட்டுவிட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவே நீங்கள் செயற்பட்டீர்கள் அதை இல்லாமல் செய்வதற்காகவே கடந்த உள்ளாட்சித் தேர்தலுக்காக வேட்பு மனுக் கோரப்பட்ட போது த.தே.கூட்டமைப்பைச் சிதைத்து தமிழரசுக் கட்சியை தனிமைப்படுத்தினார்.

தமிழ் தேசியக் கூட்டடைப்பை ஆப்ரிஹாம் சுமந்திரன் திட்டமிட்டு சிதறடித்தமையின் நோக்கம் த.தே.கூட்டமைப்பின் தலைமைப் பதவியில் இருந்து உங்களை தூக்கியெறிவதேயாகும். இப்போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து உங்களை விலக நிர்ப்பந்தித்து அரசியலில் இருந்து உங்களை முற்றாக அகற்றுவதே அவரது இலக்காகும். அதைத்தான் பகிரங்கமாக அவர் வெளிப்படுத்தி இருக்கின்றார்.

இனத்துக்கு இழைக்கப்படும் வரலாற்றுத் துரோகம்

உடல் ரீதியில் நீங்கள் பலவீனமுற்றாலும் மனரீதியில் மிகவும் வலிமையானவர் உங்களின் வலிமையைச் சிதைப்பதற்கே திரு சுமந்திரன் பகிரங்கமாக இவ்வாறான செயற்பாட்டில் இறங்கியுள்ளார்.

உடனடியாகக் கட்சி காப்பாற்றப்பட்டு தமிழ்த்தேசியத்தின் கனவுகளைச் சுமந்த மக்களின் அபிமானமிக்க தமிழ்தேசியவாதி ஒருவரைக் கொண்டு தலைமைத்துவத்தைப் பலப்படுத்தி கட்சியை நிலைப்படுத்தாவிட்டால் நிச்சயம் கட்சியின் இருள் சூழ்ந்த பக்கத்தை விரைவில் காண வேண்டி வரும் அது நமது இனத்துக்கு இழைக்கப்படும் வரலாற்றுத் துரோகமாகும். நமது அரசியல்பாதையில் போடப்படும் மாபெரும் தடைக்கல்லாக அமையும். ஆக இதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பீர்கள் என்று தமிழ் தேசியவாதிகள் எதிர்பார்க்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments