இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் துடுப்பாட்ட போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கிறது.
இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் நேற்று முன்தினம் சென்னை வந்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று காலையில் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணியினர் பிற்பகலில் பயிற்சி மேற்கொண்டனர்.
பயிற்சிக்கு பிறகு வெஸ்ட்இண்டீஸ் அணியின் உதவி பயிற்சியாளர் ரோட்டி எஸ்ட்விக் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஹெட்மயர், பூரன், ஹோப் ஆகிய இளம் வீரர்கள் முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். இது எங்களுக்கு உற்சாகம் அளிக்கிறது. நீங்கள் எந்த அளவுக்கு கடினமாக உழைத்து போட்டிக்கு தயாராகிறீர்கள் என்பது தான் முக்கியமானதாகும். கடினமான உழைப்பின் மூலம் தான் விராட்கோலி உயர்ந்த நிலையை எட்டி இருக்கிறார். அவரிடம் இருந்து இதனை நிறைய வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தாலும், கடினமாக உழைக்கவில்லை என்றால் சாதிக்க முடியாது. கடின உழைப்பு உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் அது தான் உங்களுக்கு சிறந்த வெற்றியை தேடிக்கொடுக்கும்.