போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு பிரித்தானியா அரசாங்கம் தடைகளை விதிக்க வேண்டும் என வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சரான அஹமட் பிரபுவிடம் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான நிழல் வெளிவிவகார அமைச்சரான ஸ்ரிபன் கினொக் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானிய அரசாங்கத்தின் உலகளாவிய மனித உரிமைகள் தடைகள் தொடர்பான ஆட்சிமுறை விதிகளின் கீழ் இந்த தடைகள் விதிக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் உட்பட பல அமைப்புக்கள் வெளியிட்டுள்ள விரிவான ஆவணங்களின் பிரகாரம் மோசமான மனித உரிமை மீறல்களுடன் சவேந்திர சில்வா நேரடியாக தொடர்புபட்டுள்ளதாக அஹமட் பிரபு சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட 50 பக்கங்களை கொண்ட ஆவணங்களில் ஜெனரல் சவேந்திர சில்வா மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கான சான்றுகளை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
2008 ஆம் ஆண்டு முற்பகுதியில் இருந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்த போரின் போது இடம்பெற்ற விடயங்களை ஆதாரங்களாக தொகுத்து உண்மை மற்றும் நீதித் திட்டம். பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் ஸ்ரிபன் கினொக் அஹமட் பிரபுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மை மற்றும் நீதித் திட்டம் சேகரித்த மற்றும் மதிப்பாய்வு செய்த ஆதாரங்களின் அடிப்படையில் 58 ஆவது படைப்பிரிவு உட்பட ஸ்ரீலங்கா இராணுவத்தினர் பொதுமக்களுக்கு எதிராக திட்டமிட்ட மற்றும் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தினார்கள் என்பதை நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, அம்பலவன்பொக்கணை, புதுமாத்தளன், வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் போன்ற மக்கள் செறிந்துவாழந்த பகுதிகளை நோக்கி இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் இதனால் பரவலாக பொதுமக்கள் உயிரிழந்ததுடன், அவர்களின் வாழ்வுரிமையும் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொஸ்பரஸ் மற்றும் கொத்தணிக் குண்டுத் தாக்குதல் உள்ளடங்கலாக குண்டுத் தாக்குதல்களை நடத்தியதன் மூலம் வாழ்வுரிமை மீறப்பட்டுள்ளதாக தொழிற்கட்சியின் நிழல் அமைச்சர் கூறியுள்ளார்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் சரணடைந்தவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய அதேவேளை பாலியல் வன்புணர்வு மற்றும் ஏனைய வகை பாலியல் பலாத்காரம் உள்ளடங்கலாக சித்தரவதைக்கு ஆளாகாமலிருப்பதற்கான உரிமை மீறல்களையும் மேற்கொண்டுள்ளதாக அஹமட் பிரபுவுக்கு கூறப்பட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட மருத்துவ மற்றும் மத தலைவர்கள் உள்ளடங்கலாக பெண்கள், சிறுவர்கள் மற்றும் மூத்த பிரஜைகளை இலக்குவைத்து திட்டமிட்ட தாக்குதல்களை ஸ்ரீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டள்ளது.
ஐ.நா நிபுணர்கள் குழு, ஐ.நா விசாரணை அறிக்கை, அரச சார்பற்ற நிறுவனங்களின் அறிக்கைகள் மற்றும் மிக முக்கியமாக நேரில் கண்ட சாட்சியங்களை அடிப்படையாக கொண்டதாக உண்மை மற்றும் நீதித் திட்டம் முன்வைத்த ஆதாரங்களை முன்வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் சவேந்திர சில்வா, வாழ்வுரிமை மற்றும் சித்திரவதைக்கு ஆளாகமலிருப்பதற்கான உரிமைகளை மீறும் நடவடிக்கைகளில் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் ஸ்ரிபன் கினொக் சுட்டிக்காட்டியுள்ளார். 58 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக ஷவேந்திர சில்வா செயற்பட்டதை ஆதாரங்கள் உறுதிப்படுத்துவதுடன், இறுதிக்கட்டப் போரின் போது அவருக்கும் அவர் தலைமை தாங்கிய படைக்கும் இடையில் ஒரு கட்டளை சங்கிலி இருந்தது எனவும் தெரியவந்துள்ளது.
சவேந்திர சில்வாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த படையினரால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளை அவர் அறிந்திருந்தார் என்பதை நம்புவதற்கான நியாயமான காரணங்கள் உள்ளன என்பதும் உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் ஆதாரங்கள் மூலம் புலனாகின்றது எனவும் ஸ்ரிபன் கினொக் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் அந்த மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கும் அதனை மேற்கொண்டவர்களை தண்டிப்பதற்கும் ஷவேந்திர சில்வா தவறிவிட்டார் எனவும் பிரித்தானியாவின் வெளிவிவகார, பொதுநலவாய, அபிவிருத்தி அலுவலகத்துக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆகவே பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு மக்னிட்ஸ்கி பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலம் குற்றவாளியின் செயல்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய முடியும் என்பதுடன், அவ்வாறான குற்றங்களை தடுக்க முடியும் என்ற அடிப்படையில் ஷவேந்திர சில்வாவிற்கு எதிராக தடைகளை விதிக்க வேண்டும் என ஸ்ரிபன் கினொக மேலும் வலியுறுத்தியுள்ளார்.