வைத்திய நடைமுறைகளில் மாற்றங்களை அறிவித்தார், நோர்வே சுகாதார அமைச்சர்! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing வைத்திய நடைமுறைகளில் மாற்றங்களை அறிவித்தார், நோர்வே சுகாதார அமைச்சர்! “கொரோனா” அதிர்வுகள்!!

“கொரோனா” பரவலையடுத்து நாடு முழுவதிலும் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் நாளாந்தம் வைத்திய சேவைகளுக்கான தேவைகளும், வைத்திய         உபகரணங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பில் எந்தெந்த நோயாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டுமென                     அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நோர்வேயின் சுகாதார அமைச்சர் “Bent Høie” தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலுமுள்ள வைத்தியசாலைகளிலும், சுகாதார நிலையங்களிலும் பணிபுரியும்சுகாதார சேவையாளர்கள் மிகக்கடினமான சூழ்நிலைகளில், மனம் ஒவ்வாத முடிவுகளையும் எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படலாமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக, மூதாளர் பேணகங்களில், மரணத்தை எதிர்நோக்கியுள்ள வயதான மூதாளர்களை எதாவது தேவைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டாலும், அதற்கான முன்னுரிமை வழங்கப்படுவது ஆலோசிக்கப்பட வேண்டியதோடு, கூடியளவு மூதாளர் பேணகங்களில் வைத்தே அவர்களுக்கான தேவைகளை வழங்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

வைத்திய நடைமுறைகளில் மாற்றங்களை அறிவித்தார், நோர்வே சுகாதார அமைச்சர்!

எதிர்வரும் நாட்களில் அதிகளிவிலான மக்கள் “கொரோனா” பாதிப்புக்கு ஆளாகலாமென்ற அச்சம் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கான உடனடி உயிர்காப்பு வைத்திய சேவைகளை வழங்க வேண்டி வருமென்பதால் வழமையான நடைமுறைகளிலிருந்து பல்வேறு அத்தியாவசியமான மாற்றங்களுக்கான அறிவுறுத்தல்களை கொடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  • ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட நீண்டகால சிகிச்சைகள் தொடர்பில் மீள் பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதி அத்தியாவசியம் எனக்கருதப்படும் சிகிச்சைகளே தொடரப்பட வேண்டும் எனவும் … 
  • மிகக்கடுமையான உடல்நிலையில் உள்ளவர்களுக்கான வைத்திய சேவையை வழங்குவதில் வைத்தியர்கள் பல்வேறு விடயங்களையும் சீர்தூக்கிப்பார்த்து பின்வரும் விடயங்களை கருத்தில் கொள்ளவேண்டுமெனவும் …
  1. நோயாளி தொடர்ந்து வாழக்கூடிய காலம் …
  2. சுவாச சம்பந்தமான நோயாளிகளின்  நோயின் வீரியத்தன்மை …
  3. சிறுநீரக நோய்களை கொண்டிருப்பவர்களுடைய நோயின் வீரியத்தன்மை …
  4. இதய நோயாளிகளின் நோயின் வீரியத்தன்மை …
  • நாடு முழுவதிலுமுள்ள மாகாணங்கள், வேறுவேறு இடங்களிலிருந்து கொண்டுவரப்படக்கூடிய நோயாளர்களை உள்வாங்கிக்கொள்வதற்கான, தற்காலிக கொட்டகைகளை அமைத்தல், தனியார் தங்குமிடங்களை வாடகைக்கு அமர்த்துதல் உள்ளிட்ட முன்கூட்டிய ஏற்படுகளை செய்து கொள்ளுதல் …
  • மூதாளர் பேணகங்களில் இருக்கும் மூதாளர்கள் “கொரோனா” வைரசால் பிடிக்கப்படும் பட்சத்தில் அவர்களை அந்தந்த மூதாளர் பேணகங்களில் வைத்தே சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டுமெனவும், மிகமிக அவசரம் ஏற்படும் நிலையில் மட்டும் அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லலாமெனவும்,

குறிப்பாக, வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படும் மூதாளர் ஒருவர், வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு நீண்ட காலத்துக்கு உயிர் வாழமுடியுமா என்பதும் முன்கூட்டியே பரிசீலிக்கப்படுவது அவசியமெனவும்,

“கொரோனா” தொற்றுதலுக்கு ஆளாகியுள்ளவர்களுக்கு செயற்கை சுவாச உதவியை வழங்கக்கூடிய கருவிகளுக்கான பற்றாக்குறை வைத்தியசாலைகளில் ஏற்கெனவே இருப்பதால், மூதாளர் பேணகங்களில் இருக்கும் மூதாளர்களுக்கு “கொரோனா” தொற்று ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கான செயற்கை சுவாச கருவிகள் கிடைக்காது எனவும்,

மிக கொடிய நோய்வாய்ப்பட்டு, வாழ்வின் அந்திமகாலத்தை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு, அவர்கள் மரணமடையும்வரை வலி தெரியாமல் இருப்பதற்கான மருத்துவத்தை வழங்க வேண்டுமெனவும்,

  • பொதுமக்களுக்கான நிரந்தர வைத்தியர்கள் (Fastlege) மிகமிக அவசரமான நோயாளர்களையே முன்னிலைப்படுத்த வேண்டுமெனவும் …
  • பிறந்த குழந்தைகள் தொடர்பான விடயங்களை கவனிக்கும் “தாய் – சேய் நலன்புரி” நிலையங்கள் வழமைபோல இயங்குமென்றும், பிறந்த குழந்தைகளுக்கான நோயெதிர்ப்பு ஊசிமருந்துகளை ஏற்றும் பணிகளும் தொடருமெனவும், கர்ப்பிணிகளுக்கான கவனிப்புக்களும் வழமை போலவே தொடருமெனவும் …
  • கண், பல் மற்றும் இன்னோரன்ன தேவைகளுக்காக அந்தந்த வைத்தியர்களை நாடுபவர்கள் தொடர்பில், உடனடியான வைத்தியத்தை வழங்க வேண்டுமா அல்லது வைத்தியத்தை தள்ளிப்போடலாமா என்பதை வைத்தியர்கள் முடிவு செய்யலாமெனவும், கூடுமானவரை நோயாளிகளுக்கும், வைத்தியர்களுக்கும் இடையிலான நேரடித்தொடர்புகளை நிறுத்தி, தொலைபேசியூடாகவோ அல்லது காணொளியூடாகவோ மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படலாமெனவும் …
  • மனநோயால் பாதிக்கப்பட்டவர்களும், போதைப்பொருள் பாவனைக்கு ஆளானவர்களும் தகுந்த உதவிகள் வழங்கப்படாவிட்டால், அவர்கள் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால், அவர்களுக்கான தேவைகள் கூடியளவு கவனிக்கப்படவேண்டும் எனவும் …

சுகாதார அமைச்சர் தனது அறிவுறுத்தலிகளில் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள