தமிழின அழிப்பை மறைத்து 13ம் அரசியலமைப்பை ஏற்று வரலாற்றுத் தவறிழைக்கும் கூட்டுச்சதிகாரர்களின் சதிச்செயலை முறியடிப்போம்!
உலக வரலாற்றில், மிகப்பெரும் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட மக்களாகவும் அதற்கான நீதிக்காகவும் எமது இறைமையை நிலைநாட்டும் சுயநிர்ணய உரிமைக்காகவும் நாம் சமரசமின்றிப் போராடிவருகின்றோம். பிராந்திய வல்லரசான இந்தியாவின் நலன் சார்ந்தும் ஈழத்தமிழர்களின் அங்கீகாரம் பெறப்படாமலும் உருவாக்கப்பட்டதுமான இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம் உருவாகிய ஒற்றையாட்சி அரசியல்யாப்பில் இணைக்கப்பட்ட 13ஆவது அரசியல் திருத்தத்தை எமது தேசம் என்றோ நிராகரித்திருந்த நிலையில், இன்று எமது மக்களின் ஆணைபெற்ற வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை மீறி எமது மக்களின் இறைமையை கையொப்பமிட்டு விலைபேசும் அப்பட்டமான துரோகச்செயலை எமது தேசம் என்றும் ஏற்கப்போவதில்லை.
¬சிறிலங்கா ஆக்கிரமிப்பு இராணுவம் இன்றும் தமிழின அழிப்பை மேற்கொண்டு எமது இனத்தை அழித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக எழுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தையும் தமிழின அழிப்பிற்கான நீதிகோரலையும் ஒற்றையாட்சி அரசியல் யாப்பிற்குள் ஒடுக்க கையொப்பமிட்ட
இரா.சம்பந்தன் (MP -TNA),
மாவை சேனாதிராஐh ( ITAK ,TNA),
சீ.வீ.விக்னேஸ்வரன் (MP -DPLF ,TNA),
செல்வம் அடைக்கலநாதன் (MP – TELO ,TNA),
தர்மலிங்கம் சித்தார்த்தன் (MP -DPLF ,TNA),
சுரேஸ் பிரேமச்சந்திரன் (EPRLF ,TMTK),
ந.சிறீகாந்தா ( TNP ,TMTK)
ஆகியோரதும் அவர்களது கட்சிகளினதும் வரலாற்றுத் துரோகத்தை என்றும் எமது மக்கள் மறந்துவிடமாட்டார்கள்.
எமது போராட்ட வரலாற்றில் ஈழத்தீவின் வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழீழத் தாயகத்திற்காக எமது பல்லாயிரம் மக்களும் மாவீரர்களும் உயிர்த்தியாகம் செய்தார்கள். போராட்ட ஆரம்ப காலத்திலிருந்து முள்ளிவாய்க்காலில் ஆயுத மௌனிப்புவரை, இந்திய ஆக்கிரமிப்பு உட்பட எண்ணற்ற பேரழிவுகளையும் துரோகங்களையும் எமது மக்கள் சந்தித்திருந்தபோதும் எமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தேசநலன் கருதி உங்களின் கடந்தகால வரலாற்றுத் துரோகங்களுக்கு அப்பால் தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிப்பதற்காகவே உங்களை இணைத்திருந்தார் என்பதை எமது மக்கள் நன்கறிவர். தேர்தல் விஞ்ஞாபனங்கள் மூலம் தேசியம், சுயநிர்ணயம், சமஸ்டி பேசி மக்களின் அங்கீகாரம் பெற்றுப் பாராளுமன்றக் கதிரைகளை அலங்கரிப்பதோடு, அன்னிய ஏகாதிபத்திய, பிராந்திய நலன்களை முன்நிறுத்திச் செயற்படும் முகவர்களாகவும் சுயலாபத்திற்காக இயங்கும் தேசத்துரோகிகளாகவும் எமது விடுதலை வரலாற்றில் மீண்டும் மீண்டும் உங்கள் துரோக முகங்கள் நிரூபணமாகிவருகின்றன.
வெளித்தரப்பு ஒன்றிடம் எமது மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் தீர்மானங்களை முன்வைக்கும் போது, எமது மக்களுக்கு உண்மையான தீர்வு எதுவோ அவற்றை முன்வைக்க வேண்டுமேயன்றி, வெளித்தரப்பு இதை விரும்புவார்கள் என்ற ஊகத்தின் அடிப்படையில் தீர்வுகளை முன்வைப்பது எமது மக்களுக்கு இழைக்கும் வரலாற்றுத் துரோகமாகும். சிறிலங்கா அரசையும், இந்திய அரசையும் பாதுகாப்பது உங்களின் வேலையல்ல, எமது மக்களை பாதுகாப்பதுவே உங்களது கடமை என்பதை நினைவவூட்ட விரும்புகிறோம்.
தேசிய இனங்களின் விடுதலைக்கான குரலை எந்த சக்திகளாலும் துரோகங்களாலும் அடக்கவோ, வெல்லவோ முடிவதில்லை. எமது தாயக மக்கள் இவர்களின் போலித் தேசியவாதத்தைத் தோலுரித்துத் தேசத்தின் உரிமையை விரைவில் நிலைநாட்டுவார்கள். பல கட்சிகள் இணைந்து கையொப்பமிட்டுக் கோரும் 13ஆவது திருத்தத்தை அன்னிய, சிறிலங்கா அரசுகள் ஏகோபித்த தமிழ் மக்களின் சனநாயக விருப்பாகக்காட்டி சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியல் சதிக்குள் எமது அரசியல் உரிமையை நிலைநிறுத்த முயலும் துரோக நடவடிக்கையை எதிர்த்துத் தாயகம், தமிழகம், புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ்மக்கள் ஒன்றிணைந்து ஓரணியாக போராடவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அத்தோடு கையொப்பமிட்டவர்களும் அவர்கள் சார்ந்தவர்களும் நாம் வாழும் நாடுகளுக்கு வரும்போது காத்திரமான எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவிப்பதோடு, வரலாற்றுப் பேராபத்திலிருந்து எமது தேசத்தை மீட்கும் போராட்டங்களில் பேரெழுச்சியோடு பலமான அணியாக இணைந்து பங்கெடுக்குமாறு உரிமையுடன் வேண்டிநிற்கின்றோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
தமிழின அழிப்பை மறைத்து 13ம் அரசியலமைப்பை ஏற்று வரலாற்றுத் தவறிழைக்கும் கூட்டுச்சதிகாரர்களின் சதிச்செயலை முறியடிப்போம்! – சுவிஸ் தமிழர் அரசியல் துறை – ஊடக அறிக்கை 27.01.2022