20 பந்து பரிமாற்ற போட்டி: இந்திய அணி இரண்டாவது வெற்றி!

  • Post author:
You are currently viewing 20 பந்து பரிமாற்ற போட்டி: இந்திய அணி இரண்டாவது வெற்றி!

நியூசிலாந்துக்கு எதிரான 20 பந்து பரிமாற்ற துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணி இரண்டாவது வெற்றி.

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய துடுப்பாட்ட அணி 5 போட்டிகள் கொண்ட 20 பந்து பரிமாற்ற தொடரில் விளையாடி வருகின்றது. இதில் ஆக்லாந்தில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் இந்தியா 6 இலக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 பந்து பரிமாற்ற போட்டி அதே ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் நாணய சுழட்சியில் வென்ற நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் துடுப்பெடுத்தாட்டத்தை தேர்வு செய்தார்.

முதலாவதாக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 பந்து பரிமாற்ற முடிவில் 5 இலக்குகள் இழப்பிற்கு 132 ஓட்டங்களை எடுத்தது. அதனை தொடந்து 133 ஓட்டங்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 8 ஓட்டங்கலில் ஆட்டமிழந்தார்.

அணித்தலைவர் விராட் கோலி (11 ஓட்டங்கள்) டிம் சவுதி வீசிய பந்தில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல்-ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஸ்ரேயாஸ் ஐயர் 44 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததையடுத்து, இந்த ஜோடி பிரிந்தது. இறுதியாக இந்திய அணி 17.3 பந்து பரிமாற்றங்களில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 133 ஓட்டங்களை எடுத்து 7 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 57 ஓட்டங்கள் எடுத்தார். இன்றைய ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

அடுத்ததாக இந்தியா-நியூசிலாந்து இடையேயான 3 வது 20 பந்து பரிமாற்ற போட்டி வரும் 29 ஆம் தேதி (புதன்கிழமை) ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.

பகிர்ந்துகொள்ள