வுஹான் பகுதியில் சிக்கியுள்ள 400க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் போயிங் 747 ஜம்போ ஜெட் விமானம், டெல்லியில் இருந்து நேற்று சீனா புறப்பட்டது.
டெல்லியில் சுகாதார அமைச்சகத்தினால் தயாராக வைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ கருவிகளை வாங்கிக்கொண்டு சுமார் ஆறு மணி நேரத்தில் வுஹானை அடையும் விமானம் பின்னர் அங்கிருந்து 2 முதல் 3 மணி நேரங்களில் புறப்பட அறிவுறுத்தப்பட்டது. 2-வது விமானம் இன்று இந்தியாவில் இருந்து சீனா புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வுஹானில் இருந்து இந்தியா மீட்டு வரப்படும் இந்தியர்கள் 14 நாட்கள் டெல்லி மற்றும் மானேசரில் உள்ள மையங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்கள். தொடர்ந்து, அவர்களுக்கு எந்த நோய் தொற்று ஆபத்தும் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வுகானில் இருந்து 324 இந்தியர்களை ஏற்றி கொண்டு புறப்பட்ட சிறப்பு விமானம் இந்தியா வந்தடைந்தது. முதலில் அவர்களை டெல்லி விமான நிலையத்தில் வைத்து பரிசோதனை செய்கின்றனர். தேவைப்பட்டால் அவர்களை முகாமில் கண்காணிப்பில் வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.