6 பேர் விடுதலை! முதல்வர் முக்கிய ஆலோசனை!

You are currently viewing 6 பேர் விடுதலை! முதல்வர் முக்கிய ஆலோசனை!

ஊட்டி: பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து 6 பேரை விடுதலை செய்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்ட வல்லுனர்களுடன் முக்கியமான ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

ராஜீவ் கொலை

முன்னாள் ஒன்றிய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சிறையில் உள்ளனர். இந்த நிலையில் பேரறிவாளன், உச்ச நீதிமன்றத்தில் தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.

இறுதித் தீர்ப்பு

இந்த வழக்கானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அமர்வதற்கு வந்தபோது, நீதிபதிகள் கடந்த 18ம் திகதி இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தனர்.

பேரறிவாளன் விடுதலை

ஒன்றிய இந்தியாவே பரபரப்பாக எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இந்த பேரறிவாளன் வழக்கில், நீதிபதிகள் கொண்ட அமர்வு பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்தனர். மேலும் இந்த வழக்கில் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், மாநில அமைச்சரவை தீர்மானத்திற்கு கட்டுப்பட்டவர் ஆளுநர் என தெள்ளத்தெளிவாக தீர்ப்பளித்தனர். மே 18ம் திகதி பேரறிவாளனுக்கு மட்டும் விடுதலை இல்லை, மாநில அரசின் அதிகாரத்திற்கும் கிடைத்த விடுதலை என வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஆளுநருக்கு எதிர்ப்பு

முன்னதாக கடந்த 2018ம் ஆண்டில் அதிமுக அரசு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் பல நாட்கள் காலம் தாழ்த்தி வந்தார். இதற்கு பல கட்சிகள் அப்போது ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். .இந்த நிலையில்தான் பேரறிவாளன் ஆளுனர் முடிவை எதிர்பார்க்காமல் தன்னை விடுவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் அறிக்கை

முன்னதாக திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதி 494ல், ராஜீவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து சிறையில் வாடிடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை பெற்றிட அனைத்து முயற்சிகளையும் திமுக அரசு முழு முனைப்புடன் மேற்கொள்ளும், என்று குறிப்பிட்டு இருந்தது. அதாவது பேரறிவாளன் மட்டுமின்றி மற்ற 6 பேரையும் விடுதலை செய்வதாக திமுக வாக்குறுதி கொடுத்தது.

சட்ட வல்லுனர்கள்

இந்த நிலையில் நேற்று இரவு முதல்வர் ஸ்டாலின் ஊட்டியில் இருந்தபடியே 6 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்தார். உயர் அதிகாரிங்கள், அனுபவம் வாய்ந்த சட்ட வல்லுனர்கள், மூத்த வழக்கறிஞர்கள் இந்த சந்திப்பில் இணையம் மூலம் கலந்து கொண்டனர்.

மீண்டும் தீர்மானம்

இதில் முதல்வர் ஸ்டாலினிடம் 6 பேரையும் விடுதலை செய்வதில் சிக்கல் இல்லை. அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பலாம். மேலும் 161 படி அனுப்பினால் ஆளுநர் அதை ஏற்க வேண்டும். ஏற்கனவே ஆளுநரை உச்ச நீதிமன்றம் இதில் விமர்சனம் செய்துள்ளதால் அவருக்கு இதில் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால் அப்படியே செய்யலாம் என்று கூறி உள்ளனர். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின்.. பேரறிவாளன் வழக்கு தீர்ப்பு மற்றவர்களுக்கும் பொருந்துமா என்று கேட்டு இருக்கிறாராம்.

வழக்கு தொடுத்து

ஆம் பொருந்தும், ஆனால் இனி தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப வேண்டும். அல்லது அவர்கள் வழக்கு தொடுத்து பேரறிவாளன் போல தங்களை விடுதலை செய்ய சொல்லலாம். இரண்டு வகையில் இந்த விடுதலையை மேற்கொள்ள முடியும் என்று கூறியுள்ளனர். அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றுவதை பற்றி முதல்வர் ஸ்டாலின் மேலும் ஆலோசனை செய்து இருக்கிறாராம்.

முன்னாள் நீதிபதிகள்

மற்ற 6 பேரும் பேரறிவாளன் போன்றவர்கள் கிடையாது. பேரறிவாளனுக்கு ஆதரவாக அவரிடம் வாக்குமூலம் வாங்கிய அதிகாரியே பேசி இருக்கிறார். முன்னாள் நீதிபதிகளும் இவருக்கு ஆதரவாக பேசி உள்ளனர். ஆனால் மற்ற 6 பேர் அப்படி கிடையாது. எனவே அவர்களை விடுதலை செய்வது சட்ட ரீதியாக நன்றாக இருக்குமா? அரசுக்கு சிக்கல் என்னென்னெ இருக்கும் என்று கேட்டு இருக்கிறாராம். சட்ட ரீதியாக எல்லா ஆயுள் தண்டனை கைதிகளுக்கும் மாநில அரசு விடுதலை கொடுக்க முடியும், அது என்ன வழக்காக இருந்தாலும் சரி என தெரிவித்தனர்.

தேர்தல் வாக்குறுதி

இதனால் முதல்வர் ஸ்டாலின் விரைவில் இவர்களை விடுக்கலாமா வேண்டாமா என்ற முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதி. அதனால் கண்டிப்பாக அதை நிறைவேற்றுவார்கள் என்று திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments