மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட சிவராசா அனோஜன் ஓரிரு வாரங்களில் நாடு திரும்புவார் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு எதிரான வழக்கை சவூதி அரேபியாவின் அரச வழக்கறிஞர் அலுவலகம் கைவிடத் தீர்மானித்துள்ளதாகவும், அவருக்கு எதிராக சவூதி நீதிமன்றத்தில் இனி எந்த வழக்கும் இல்லை என்றும் வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தற்போது சவூதி அரேபியாவில் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஓரிரு வாரங்களுக்குள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் வௌிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சவூதி நீதிமன்றத்தினால் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சிவராசா அனோஜன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவரை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
சிவராசா அனோஜனின் குடும்ப உறவுகள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு வருகை தந்து, தமது மகனை விடுவிப்பதற்கு மேற்கொண்ட அர்ப்பணிப்புமிக்க முயற்சிகளுக்காக ஜனாதிபதி, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு உட்பட இதில் சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
மேலும், இதற்காக ஒத்துழைப்பு நல்கிய சவூதி அரசாங்கம், அந்நாட்டு நீதிமன்றம், சவூதி மற்றும் இலங்கை இராஜதந்திர நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் இதற்காக சவூதி அரேபியா சென்ற சட்டத்தரணிகள் குழுவிற்கும் இதன் கௌரவம் உரித்தாவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
2026 செப்டம்பர் 17ம் திகதி கிழக்கு பிராந்திய சவூதி மேல்முறையீட்டு நீதிமன்றம் சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதித்திருந்தது.
அவதூறானது எனக் கருதப்படும் ஃபேஸ்புக் பதிவொன்று தொடர்பாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அமையவே இத்தண்டனை வழங்கப்பட்டது.
இராஜதந்திர மற்றும் ஏனைய தலையீடுகளின் அடிப்படையில் கடந்த ஒக்டோபர் 14ம் திகதி அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் இரத்து செய்தது.
இருப்பினும், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த ஏனைய தண்டனைகளிலிருந்தும் அவரை விடுவிப்பதற்காக இராஜதந்திர ரீதியில் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக அவர் தற்போது முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவ் வழக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு முன்னெடுத்துச் செல்வதில்லை என சவூதி அரேபியாவின் அரச வழக்கறிஞர் அலுவலகம் 2026 நவம்பர் 09ம் திகதி தீர்மானித்துள்ளது.






