அதியுயர் வேகத்தில் மீண்டும் “கொரோனா” பரவலாம்! எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!!

You are currently viewing அதியுயர் வேகத்தில் மீண்டும் “கொரோனா” பரவலாம்! எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!!

“கொரோனா” வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த பல வாரங்களாக மூடப்பட்டிருந்த ஐரோப்பிய நாடுகள் மீண்டும் படிப்படியாக தம்மை வழமை நிலைக்கு கொண்டுவரும் முயற்சிகளில் இறங்கியுள்ளன.

இதேவேளை, பகுதியாகவோ அல்லது முழுவதுமாகவோ மூடப்பட்டிருக்கும் நாடுகள் தம்மை மீண்டும் வழமை நிலைக்கு கொண்டுவரும் பொருட்டு, தத்தமது நாடுகளில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை விடுவிக்கும்போது மிகவும் அவதானமாக இருக்கவேண்டுமென தெரிவித்திருக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் “Tedros Adhanom Ghebreyesus”, விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் மிகவிரைவில் தளர்த்தப்படும் பட்சத்தில் மீண்டும் உச்சவேகத்தில் “கொரோனா” வைரஸ் பரவும் ஆபத்துள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.

குறிப்பாக, கீழ்வரும் 6 விடயங்களை உலக நாடுகள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமென அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்

அந்தந்த நாடுகளில் வாழும் “கொரோனா” வால் பீடிக்கப்பட்டவர்கள் எங்கிருக்கிறார்கள், அவர்களுக்கு எங்கிருந்து வைரஸ் தொற்றியது போன்ற விபரங்களை அந்தந்த நாடுகளின் சுகாதரத்துறை சரியாக வைத்திருக்க வேண்டுமெனவும் …

அந்தந்த நாடுகளின் சுகாதாரத்துறையினர், “கொரோனா” வால் பீடிக்கப்படுபவர்களை கண்டறிந்து, அவர்களுக்கான சோதனைகளை மேற்கொள்வதோடு, அவர்களை தனிமைப்படுத்தி வைத்து வேண்டிய வைத்திய சிகிச்சைகளை வழங்குவது மாத்திரமல்லாமல், நோயாளிகள் யார் யாரோடெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்பதை கண்டறிந்தது அவர்களுக்கும் சோதனைகளை செய்வதற்கான தயார் நிலையில் இருக்கவேண்டுமெனவும் …

கட்டுப்பாடுகளை தளர்த்த விரும்பும் நாடுகள் முதலில் தத்தமது நாடுகளிலுள்ள வைத்தியசாலைகள் மற்றும் முதியோர் காப்பகங்களில் “கொரோனா” தொற்று மேன்மேலும் பரவாத வண்ணம் ஆவன செய்யவேண்டுமெனவும் …

பாடசாலைகள், தொழில் புரியுமிடங்கள் உள்ளிட்ட, மக்கள் அதிகமாக கூடுமிடங்களில், வைரஸ் தொற்று பரவாமலிருக்கும் விதத்தில் வரைமுறைகள் கொண்டுவரப்படுவதோடு, விதந்துரைக்கப்பட்டதன் அடிப்படியில் மக்களிடையே இடைவெளிகள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளப்படுவதோடு, உலக சுகாதார நிறுவனத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமெனவும் …

வேற்று நாடுகளிலிருந்து தத்தமது நாடுகளுக்குள் உள்நுழைவோரை, குறிப்பாக “கொரோனா” வால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வருவோரை தகுந்தமுறையில் பரிசோதிப்பதோடு, அவர்களுக்கு “கொரோனா” தொற்று இருக்குமென சந்தேகிக்கப்படும் பட்சத்தில் அவர்களை தனிமைப்படுத்தி வைக்கவும் வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் …

“கொரோனா” பரவலின் ஆபத்தை சரியாக உணர்ந்துகொண்டு மக்களும் தம்மாலான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை கடைப்பிடிக்கும் வண்ணம் மக்களுக்கான ஆலோசனைகள் தொடர்ச்சியாக தகுந்த முறையில் வழங்கப்பட வேண்டுமெனவும், உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் “Tedros Adhanom Ghebreyesus” உலக நாடுகளுக்கு அறிவித்தல் விடுத்து எச்சரிக்கை செய்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள