அரச வெசாக் விழாவை யாழ்ப்பாணத்தில் நடத்த தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு!!

You are currently viewing அரச வெசாக் விழாவை யாழ்ப்பாணத்தில் நடத்த தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு!!

அரச வெசாக் விழாவை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், இதற்கு யாழ்ப்பாண மக்களிடம் இருந்து எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன. தமிழர் தாயகத்தில் பௌத்த ஆதிக்கத்தை நிலைநாட்டுவதை நியாயப்படுத்தும் செயற்பாடாக இந்த விழா அமையும் என யாழ். மக்கள் தெரிவித்துள்ளனர். 

தமிழர்களின் முக்கிய நகரமாகத் திகழும் யாழ்ப்பாணத்தில் பௌத்த மதம் சார்ந்த நிகழ்வை அரச விழாவாக நடத்துவதன் மூலம் தமிழர் தாயகக் கோட்பாடு கேள்விக்குட்படுத்தப்படுகின்றது எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் அரசியல்வாதிகள் இதற்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இம்முறை அரச வெசாக் விழாவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு யாழ். நாகதீப ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் வைத்து நேற்று முன்தினம் (25) அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். 

அதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களின் 65 விகாரைகள் மற்றும் 35 அறநெறி பாடசாலைகளை ஒன்றிணைத்து இம்முறை அரச வெசாக் விழாவை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவுக்கு அறிவித்துள்ளார்.

பாரம்பரிய வெசாக் விழாவிலிருந்து மாறுபட்டதாக, பிற மதங்களுடன் இணைந்து அரச வெசாக் விழாவை ஏற்பாடு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை இம்முறை அரச வெசாக் விழாவின் விசேட அம்சமாகும் எனவும் அச்செயற்பாட்டை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் விவகார திணைக்களங்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் எனவும் கபில குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே, வடக்கு – கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் வைக்கப்பட்டு வருகின்றனர். தமிழினத்தின் தொன்மைகள் சிதைக்கப்பட்டு தமிழரின் வரலாற்று நிலங்கள் பௌத்த மயமாக்கப்படுகின்றன. 

தமிழர் தாயகம் தொல்லியல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பௌத்த சிலைகளைக் கொண்டு கபளீகரம் செய்யப்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில், யாழ்ப்பாணத்தில் அரச வெசாக் விழாவை நடத்துவது தமிழ் மக்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் இவ்விடயத்தில் தமிழ் அரசியல்வாதிகள் தலையிட்டு தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பகிர்ந்துகொள்ள