அலைபேசியால் வந்த வினை – விலக்குப் பிடிக்கப் போனவர் பலி!தந்தையும் மகனும் கைது!

You are currently viewing அலைபேசியால் வந்த வினை – விலக்குப் பிடிக்கப் போனவர் பலி!தந்தையும் மகனும் கைது!

மட்டக்களப்பு நகர பகுதியில் குடும்ப பிரச்சினையை தீர்க்கச் சென்றவர், தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட தந்தையை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் சிறுவனை சிறுவர் சீர்திருத்த சிறைச்சாலையில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் உத்தரவிட்டார்.

ஏறாவூர் ஆறுமுகதான்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஓய்வு பெற்ற காவல்த்துறை உத்தியோகத்தரான தம்பிப்பிள்ளை மனேகரராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு இரண்டாம் குறுக்கு வீதியிலுள்ள சகோதரியின் மகளுக்கும், அவரது கணவனுக்கும் இடையில் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையை தீர்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை பகல் 2 மணியளவில் குறித்த வீட்டிற்கு சென்ற போதே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

கணவன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தபோது அதனை 15 வயதுடைய அவர்களின் மகன் அலைபேசியில் உயிரிழந்தவரை வீடியோ எடுத்துள்ளார். அப்போது உயிரிழந்தவர் சிறுவனின் அலைபேசியை பறித்து அவனது கன்னத்தில் அடித்துள்ளார்.

தனது மகனை அடித்ததால் கோபமடைந்த தந்தையும் மகனும் சேர்ந்து அவரை அடித்து தாக்கி தள்ளியுள்ளனர். தாக்கியவர்களை உறவினர்கள் விலக்கிய பின்னர் மூச்சின்றி கிடந்ததையடுத்து உடனடியாக அருகிலுள்ள மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்தை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் சென்று பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேதபரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட தந்தையையும் 15 வயது மகனையும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் சிறுவனை சிறுவர் சீர்திருத்த சிறைச்சாலையில் வைக்குமாறும் பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக காவல்த்துறை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments