அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸ் உட்பட 22 பேர் பேரினவாதச் சூழலில் காணாமல் ஆக்கப்பட்டு நேற்றோடு (20.08.2026) 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இரண்டு தசாப்தங்கள் கடந்தும் மூடி மறைக்கப்பட்டுள்ள உண்மையை வெளிக்கொண்டுவர வலியுறுத்தி, அல்லைப்பிட்டியில் இன்று உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
அமைதிப் பேரணியும் விசேட வழிபாடும்:
அமைதி ஊர்வலம்: அல்லைப்பிட்டி சந்தியிலிருந்து ஆரம்பமான அமைதிப் பேரணியில் கிறிஸ்தவ மதகுருக்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் கதறியழும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.
ஆலயத்தில் அஞ்சலி: பேரணி புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தைச் சென்றடைந்ததும், அல்லைப்பிட்டி பங்குத்தந்தை அருட்தந்தை லியோ பாதர் தலைமையில் விசேட வழிபாடுகளும் நினைவஞ்சலி நிகழ்வுகளும் நடைபெற்றன.
மூடி மறைக்கப்படும் உண்மை: 2006இல் நடந்தது என்ன?
நான்காம் கட்ட ஈழப்போர் தீவிரமடைந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் திகதி, யாழ்ப்பாணத்திலிருந்து அல்லைப்பிட்டிக்குச் சென்று மீண்டும் திரும்பிய வழியிலேயே அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளாரும் அவரது உதவியாளரும் மாயமாக்கப்பட்டனர்.
1. இராணுவச் சோதனைச் சாவடிப் பதிவு: அன்றைய தினம் பிற்பகல் 1.45 மணியளவில் அல்லைப்பிட்டிக்குச் சென்றதற்கான பதிவும், பிற்பகல் 1.50 மணியளவில் அங்கிருந்து திரும்பியதற்கான பதிவும் பண்ணைப் பாலம் பகுதியிலிருந்த இராணுவச் சோதனைச் சாவடியில் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
2. பதில் இல்லாத வினாக்கள்: இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பதிவுகள் இருந்தபோதிலும், அதன்பின்னர் இருவருக்கும் என்ன நடந்தது? அவர்கள் எங்கே கொண்டு செல்லப்பட்டார்கள்? என்ற உண்மை இதுவரை வெளிவரவில்லை.
உண்மையை வெளிக்கொணர எழும் குரல்கள்:
நிகழ்வில் அஞ்சலி உரையாற்றிய மறைமாவட்ட குருக்கள் ஒன்றிய தலைவர் அருட்பணி எஸ். றெக்ஸ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் மா. இளப்பிறை, சட்டத்தரணி க. சுகாஸ், கொழும்பைச் சேர்ந்த அருட்தந்தை செராட் மற்றும் யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு தலைவர் அருட்தந்தை அ. அகஸ்ரின் ஆகியோர், “20 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட போதிலும் அரசினாலும் நீதித்துறையினாலும் உண்மை தொடர்ச்சியாகக் இருட்டடிப்பு செய்யப்பட்ருவது ஏற்றுக்கொள்ள முடியாத அடக்குமுறையாகும்” எனச் சுட்டிக்காட்டினர்.
“எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்” என்ற நீதி கோரும் உரத்த குரலுடன், காணாமல் ஆக்கப்பட்ட 22 பேரின் புகைப்படங்களுக்கு உறவினர்கள் கண்ணீருடன் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
இராணுவம் அல்லைப்புட்டியில் குண்டுகளை வீசி மக்களை படுகொலை செய்து கொண்டிருந்த காலத்தில் மக்களை காப்பாற்றி யாழ்ப்பாணம் கொண்டுவருவதற்கு முயற்சி செய்தபோது இராணும் அனுமதிக்கவில்லை ஆனாலும் மக்களுக்காக பத்துநாள் பணியாற்றியபோதே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.






