இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகள் தொடர்பில் ஐ.நா. கடும் விசனம்!

You are currently viewing இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகள் தொடர்பில் ஐ.நா. கடும் விசனம்!

மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தொழிற்சங்கப்பிரதிநிதிகள் ஆகியோர் அவர்களது கடமைகளிலும் மனித உரிமைகள்சார் செயற்பாடுகளிலும் தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபட்டமைக்காக அடக்குமுறைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் தன்னிச்சையான தடுத்துவைப்புக்களுக்கும் உள்ளாக்கப்படுவது குறித்து ஐக்கிய நாடுகள் சபை கடும் விசனத்தை வெளிப்படுத்தியிருக்கின்றது.

 இலங்கையின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தலைவர்கள்மீது அடக்குமுறைகளும் அச்சுறுத்தல்களும் பிரயோகிக்கப்படுவது குறித்தும் அவர்கள் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்படுவது தொடர்பிலும் விளக்கம்கோரி மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் மேரி லோலொர், தனிச்சையான தடுத்துவைப்பு தொடர்பான ஐ.நா செயற்பாட்டுக்குழுவின் பிரதித்தலைவர் மிரியம் எஸ்ரடா-கஸ்ரிலோ, கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் ஐரின் கான், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கும் கலந்துரையாடுவதற்குமான உரிமை தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் க்ளெமென்ற் நியாலெற்சொஸி வோலே மற்றும் உண்மை, நீதி, இழப்பீடு, மீள்நிகழமையை உறுதிப்படுத்தல் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் ஃபெபியன் சல்வியொலி ஆகியோர் இணைந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி இலங்கை அரசாங்கத்திற்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தனர்.

 அக்கடிதத்தில் விளக்கம்கோரப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பிலான பதில் கடிதத்தை இலங்கை அரசாங்கம் இம்மாதம் 14 ஆம் திகதி ஐ.நாவின் விசேட அறிக்கையாளர்களுக்கு அனுப்பிவைத்திருந்தது. 

இந்நிலையில் அவ்விரு கடிதங்களும் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் பார்வையிடக்கூடியவகையில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.

 மேற்கூறப்பட்டவாறு இலங்கை அரசாங்கத்திடம் விளக்கம்கோரி ஐ.நா விசேட அறிக்கையாளர்களினால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான சுதேஷ் நந்திமால் சில்வா, சேனக பெரேரா, ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன மற்றும் தொழிற்சங்கத்தலைவரான ஜோசப் ஸ்டாலின் ஆகியோருக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் விரிவான தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன் அவைகுறித்து விளக்கமளிக்குமாறும் அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளது.

 இருப்பினும் அவற்றில் சில குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் விளக்கமளித்திருந்தாலும், மேலும் பல கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தவறியிருக்கின்றது என்று மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் மேரி லோலொர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

 இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்த கடிதத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தொழிற்சங்கப்பிரதிநிதிகள் ஆகியோர் அவர்களது பணியிலும் மனித உரிமைகள்சார் செயற்பாடுகளிலும் தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபட்டமைக்காக அடக்குமுறைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் தன்னிச்சையான தடுத்துவைப்புக்களுக்கும் உள்ளாக்கப்படுவது குறித்து எமது வலுவான கரிசனையை வெளியிப்படுத்தியிருந்தோம். இத்தகைய தடுத்துவைப்புக்கள் சம்பந்தப்பட்டவர்களை உடலியல் மற்றும் உளவியல் ரீதியில் மிகமோசமாகத் தாக்குவதுடன் மாத்திரமன்றி, சமூகத்தில் வாழ்பவர்கள் பாதுகாப்பின்றி உணர்வதற்கும் நீதித்துறையின்மீது நம்பிக்கை இழப்பதற்கும் வாய்ப்பேற்படுத்தும். அதுமாத்திரமன்றி கொவிட் – 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சுகாதார வழிகாட்டல்கள், கருத்துச்சுதந்திரத்தையும் ஒன்றுகூடுவதற்கான உரிமையையும் அடக்கும் வகையில் தவறாகப் பிரயோகிக்கப்படுகின்றமை கடுமையான கரிசனைகளைத் தோற்றுவித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments