இளையோருக்கான உலகக் கோப்பை துடுப்பாட்ட போட்டியில், மேற்கிந்திய தீவுகளை வெளியேற்றி நியூசிலாந்து அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.
16 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது இளையோருக்கான உலகக் கோப்பை துடுப்பாட்ட போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.
இதில் பினோனியில் நேற்று நடந்த 2-வது கால் இறுதி ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
நாணய சுழட்சியில் ஜெயித்து முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 47.5 பந்து பரிமாற்றங்களில் 238 ஓட்டங்கள் எடுத்து சகல இலக்குகளையும் இழந்தது. அதிகபட்சமாக கிர்க் மெக்கன்சி 99 ஓட்டங்கள் எடுத்தார்.
நியூசிலாந்து அணி தரப்பில் கிறிஸ்டியன் கிளார்க் 4 இலக்குகளும், ஜோய் பீல்டு, ஜெஸ்சி தாஷ்கோப் தலா 2 இலக்குகளும் கைப்பற்றினார்கள்.
பின்னர் 239 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி 49.4 பந்து பரிமாற்றங்களில் 8 இலக்குகள் இழப்புக்கு 239 ஓட்டங்கள் எடுத்து 2 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது.
தோல்வி கண்ட மேற்கிந்திய தீவுகள் அணி அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. 9-வது இலக்குக்கு ஜோய் பீல்டு (38 ஓட்டங்கள்), கிறிஸ்டியன் கிளார்க் (46 ஓட்டங்கள்) ஜோடி ஆட்டம் இழக்காமல் 86 ஓட்டங்கள் திரட்டியது அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது. நியூசிலாந்து வீரர் கிறிஸ்டியன் கிளார்க் ஆட்டநாயகன் விருது பெற்றார்.