கிளிநொச்சியில் ஶ்ரீலங்கா பொலிஸாரின் அராஜகம் நினைவுகூரும் இடத்தில் நள்ளிரவில் அட்டகாசம்
கிளிநொச்சி டிப்போ சந்திப் பகுதியில், உயிர்நீத்த எமது தியாகப் புதல்வர்களை நினைவுகூரும் நாளை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த பதாகைகளும் வீதி வளைவுகளும் நள்ளிரவு வேளையில் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளன.
தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்தில் பொலிஸார் தகாத, கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்ததாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். கைது செய்யும்போது “பயங்கரவாதிகளை நினைவுகூர இங்கு இடமில்லை” என்றும் கூறியதாகவும் அறிய முடிகிறது.
இது பொலிஸார் சட்டத்தை நிலைநாட்டும் செயல் கிடையாது மாறாக ஒரு இனத்தின் துக்கத்தின் மீது நடத்தப்படும் அடக்குமுறை.
ஒரு தாய் தன் பிள்ளையை நினைத்து ஒரு பதாகை வைப்பது எப்படிக் குற்றமாகும்? தமது உறவுகளுக்காக அழுவதற்குக்கூட வாக்குமூலம், நீதிமன்றம், பொலிஸ் நிலையம் என்று அலைக்கழிக்கப்பட வேண்டுமா?
எமது உறவுகளுக்கு முத்திரை குத்த பொலிஸாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
அவர்கள் நீதிபதிகள் அல்ல. சட்டம் ஒழுங்கைப் பேணுவதே அவர்கள் பணி. மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு, அதே மக்களின் துயரத்தை இழிவுபடுத்துவது எவ்வளவு அபத்தமானது .
சர்வதேசத்தின் முன் நல்லிணக்கம் பேசிவிட்டு,தனது சொந்த நாட்டு மக்களின் துயரத்தை நசுக்குவது எவ்வளவு கொடூரமானது . மாற்றம் என்று சொல்லி வந்தவர்களின் ஆட்சியிலும் பழைய அடக்குமுறையே தொடர்கிறது என்றால், அந்த மாற்றம் யாருக்கு?
இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை எந்த இனத்துக்கும் உரியது. அதை மறுப்பவர்கள் நல்லிணக்கம் பற்றிப் பேச அருகதையற்றவர்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் மீதான நடவடிக்கைகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும்.
தகாத வார்த்தைகளைப் பிரயோகித்ததாகக் கூறப்படும் பொலிஸார் மீது சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அகற்றப்பட்ட பதாகைகள் உரிய முறையில் கையாளப்பட வேண்டும்.
நினைவுகூரலுக்குத் தடை போடலாம். ஆனால் எங்கள் இதயங்களில் உள்ள நினைவுகளுக்கு எந்தத் தடையும் போட முடியாது
அவர்களை எங்கள் இதயங்களில் வைத்துப்பூஜிக்கிறோம்.






