“கொரோனா” கட்டுப்பாடுகள் நீடிப்பால், கோடைகால விடுமுறைகள் பாதிப்பு! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing “கொரோனா” கட்டுப்பாடுகள் நீடிப்பால், கோடைகால விடுமுறைகள் பாதிப்பு! “கொரோனா” அதிர்வுகள்!!

“கொரோனா” வைரசு பரவலினால் நோர்வேயில் தற்போது நடைமுறையிலிருக்கும் இறுக்கமான கட்டுப்பாடுகள் இன்னும் 18 மாத காலத்துக்கு நீடிக்கப்பட வேண்டிய தேவையேற்படலாமென, நோர்வேயின் சுகாதார அமைப்பின் இயக்குனர் தெரிவித்திருக்கும் நிலையில், இவ்வருடத்துக்கான கோடைகால விடுமுறைகளில் பெரும் பாதிப்பை நோர்வே மக்கள் எதிர்கொள்ளவேண்டி வருமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

“கொரோனா” வுக்கெதிரான உறுதிசெய்யப்பட்ட மருந்துகள் எதுவும் தற்போதுவரை அறிவிக்கப்படாத நிலையில், மேற்படி வைரசின் தாக்கத்தால் பலரும் நாளாந்தம் பாதிக்கப்பட்டும், மரணமடைந்து வரும் நிலை தொடர்ந்து வருவதால், தற்போதுள்ள அவசரநிலை கட்டுப்பாடுகள் பல மாதங்களுக்கு தொடரலாமென்ற எதிர்வுகள் கூறப்பட்டுள்ள நிலையில், நோர்வே சுகாதார அமைப்பின் இயக்குனரின் மேற்குறிப்பிட்ட கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

இதேவேளை, நோர்வேயில் மட்டுமல்லாது, சர்வதேச நாடுகளிலும் இதே பிரச்சனை தொடர்ந்து வருவதால், நாட்டு விட்டு நாடு போக முடியாத நிலையில், கோடை விடுமுறை காலத்திலும் அனைவரும் வீடுகளுக்குள் முடங்க வேண்டிய நிலை ஏற்படலாமென தெரிவிக்கப்படுகிறது.

வழமையாகவே வருடாந்தம் கோடைகால விடுமுறைகளுக்காக உலகெங்கும் வேற்று நாடுகளுக்கு பறந்துவிடும் பழக்கமுள்ள நோர்வே மக்கள், வருட ஆரம்பத்திலேயே பயணங்களுக்கான விமானச்சீட்டுக்களையும், தங்குமிடங்களையும் முன்பதிவு செய்துவிடுவது வழமையானது. இந்நிலையில் இவ்வருடமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கோடை விடுமுறைக்காக முன்னேற்பாடுகளை செய்துள்ள நிலையில், இம்மாத தொடக்கத்தில் அரசு அறிவித்துள்ள “கொரோனா” கட்டுப்பாடுகளை தொடர்ந்து, குறிப்பிட்ட சில நாடுகளுக்கு போவதை தவிர்த்துக்கொள்ளும்படி நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சு அறிவுறுத்தல் விடுத்திருந்தது. இவ்வறிவுறுத்தலில், நோர்வே மக்கள் கோடைகால விடுமுறைக்காக அதிகம் விரும்பிச்செல்லும் நாடுகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வெளியுறவுத்துறையின் பரிந்துரைகளையும் மீறி மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்பவர்களுக்கான பயணக்காப்புறுதிகள் செல்லுபடியற்றவையாக கருதப்படுமென காப்புறுதி நிறுவனங்களும் அறிவித்துள்ளன.

இவ்வாறான எதிர்பார்க்கப்படாத புறச்சூழல்களாலும், நடைமுறைச்சிக்கல்களாலும் இவ்வாண்டுக்கான கோடை விடுமுறை காலத்திலும் மக்கள் வீடுகளிலேயே முடங்கியிருக்க வேண்டி வருமெனவும், அதற்காக மக்கள் தம்மை மனதளவில் தயார் செய்யவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள