கொரோனா தொற்றாளர்களால் அம்பியூலன்ஸ்கள் இல்லை!

You are currently viewing கொரோனா தொற்றாளர்களால் அம்பியூலன்ஸ்கள் இல்லை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் கண்காணிக்கப்படுபவர்களில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால், அவர்களை, தெற்கில் உள்ள கொரோனா வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்வதற்கு, பொதுமக்களின் தேவைக்காக உள்ள அம்பியூலன்ஸ் வண்டிகளே பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் காண்டீபன், இதனால், வைத்தியசாலை தேவைகளுக்கு அம்பியூலன்ஸ் வண்டி இல்லாத நிலை காணப்படுவதாகவும் கூறினார்.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில், நேற்று  (27) நடைபெற்ற கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயற்றிட்ட கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே கூடிய தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையம் காணப்படுகின்றன எனவும் படையினரின் கண்காணிப்பின் கீழ் 59ஆவது படைப்பிரிவு, விமானப் படைத்தளம், 68ஆவது படைப்பிரிவின் கீழ் என மூன்று தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்கள் காணப்படுகின்றன எனவும் கூறினார்.

இவையாவும் படையினரின் கட்டுப்பாட்டில் நிறுவப்பட்டுள்ளன எனத் தெரிவித்த அவர், கொரோனா தொற்று இருப்பவர்களை இடமாற்றம் செய்வதற்கு போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் அதனால் பிராந்திய சுகாதார பணிமனையையே நாடுகின்றார்களெனவும் கூறினார்.

மாவட்டத்தில் மக்களின் சேவைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் அம்பியூலன்ஸ் வண்டிகளே இதற்காக பயன்படுத்தப்படுகின்றனவெனத் தெரிவித்த அவர், இதற்கென, தனியான அம்பியூலன்ஸ் வண்டிகளை ஒழுங்கு செய்து கொடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

பகிர்ந்துகொள்ள