சட்டவிரோத விகாரையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்! ஸ்ரீலங்கா காவல்துறை அடாவடி!!

You are currently viewing சட்டவிரோத விகாரையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்! ஸ்ரீலங்கா காவல்துறை அடாவடி!!
காங்கேசன்துறை, தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுமாறும், விகாரை ஆக்கிரமித்துள்ள தனியார் காணிகளை திரும்பவும் உரிமையாளர்களான தமிழ்மக்களிடம் ஒப்படைக்க கோரியும், குறித்த விகாரைக்கருகில் இன்று அதிகாலை தொடங்கிய மக்கள் போராட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமைவரை தொடர்ச்சியாக நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தில் மக்களோடு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. செல்வராஜா கஜேந்திரன், சட்ட ஆலோசகர் / சட்டவாளர் திரு. நடராஜர் காண்டீபன், ஊடகப்பேச்சாளர் / சட்டவாளர் திரு. கனகரத்தினம் சுகாஸ், திரு தீபன், மகளிரணித்தலைவி திருமதி. வாசுகி சுதாகரன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்களும், தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் திரு. ஐங்கரதேசன் பொன்னுத்துரை உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.
இரவிரவாக தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போராட்டத்தை குழப்பும் நோக்கோடு, ஶ்ரீலங்கா காவல்துறையினர் போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்துகொள்வதோடு, வீதித்தடைகளை போட்டு, சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதியை காவல் காத்துவருவதோடு, போராட்டக்கார்ரகளை கைது செய்யவும் முயற்சிப்பதாக களத்திலிருப்பவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, களத்தில் போராடிக்கொண்டிருக்கும் மக்கள் மீது அச்சுறுத்தலில் ஈடுபட்டிருந்த ஶ்ரீலங்கா காவல்துறையின் தமிழ்பேசும் காவல்துறையினரான “கலாவிநோதன்” என்பவர், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளரும், சட்டவாளருமான திரு. கனகரத்தினம் சுகாஸ் மீது, அவதூறை முன்வைத்ததால் அங்கு அவருக்கும், திரு. கனகரத்தினம் சுகாசுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தபோது,இரவிரவாக தொடர்போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், போராட்ட களத்தில் தங்குவதற்காக கொட்டகை அமைக்கப்பட்டபோது, அதனை ஶ்ரீலங்கா காவல்துறை அனுமதிக்காமல் அகற்ற வைத்திருப்பதோடு, அச்சுறுத்தும் வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
பிந்திக்கிடைத்த தகவல்களின்படி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், சட்டவாளருமான திரு. நடராஜர் காண்டீபன் ஆகியோர் ஸ்ரீலங்கா காவல்துறையால் சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளரும், சட்டவாளருமான திரு. கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இப்போராட்டத்தில் அனைத்து மக்களும் இணைந்து கொண்டு வலுச்சேர்க்குமாறு தொடர் அழைப்புக்கள் பலமட்டங்களிலும் விடுக்கப்பட்டுக்கொண்டுவரும் நேரத்தில், கடந்த இரு வருடங்களுக்கு முன்னதாக குறித்த பகுதியில் விகாரை சட்டவிரோதமாக அமைக்கப்படுவது தொடர்பில் கவனிக்கப்பட வேண்டுமென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலி . வடக்கு அபிவிருத்திச்சபையிடம் வேண்டுகோளொன்றை முன்வைத்திருந்த போது, அதனை ஆதரித்து, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. சுமந்திரனும் கருத்துரைத்திருந்தாராயினும், இன்றைய போராட்டங்களில் அவரோ அல்லது அவரது கட்சியினரோ கலந்துகொள்ளவில்லையென்பதும், குறைந்த பட்சம் இந்த மக்கள் போராட்டத்துக்கு தார்மீக ஆதரவைத்தேனும் வழங்கியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments