சந்திரனில் கொடி நாட்டிய சீனா!

You are currently viewing சந்திரனில் கொடி நாட்டிய சீனா!

அமெரிக்காவை அடுத்தது சந்திரனில் கொடி நாட்டிய இரண்டாவது நாடென்ற பெருமையை சீனா தனதாக்கிக்கொண்டுள்ளது.

2020 நவம்பர் மாத இறுதியில், “Chang – E – 5” என்ற ஆளில்லா விண்ணோடத்தை சந்திரனுக்கு சீனா அனுப்பியிருந்தது. சீனாவின் திட்டப்படி, சந்திரனுக்கு அனுப்பப்பட்ட மேற்படி ஆளில்லா விண்ணோடம், சந்திரனில் இருந்து சுமார் 2 கிலோ எடையுள்ள கல்லொன்றையும் பூமிக்கு எடுத்து வந்துள்ளது.

1969 ஆம் ஆண்டில் அமெரிக்கா, சந்திரனில் இருந்து கற்களை பூமிக்கு எடுத்து வந்திருந்ததை தொடர்ந்து, இரண்டாவது நாடாக அன்றைய சோவியத் ஒன்றியம் சந்திரனிலிருந்து கற்களை எடுத்து வந்திருந்தது. இந்த வரிசையில் சீனா இப்போது 3 ஆவது நாடாக இணைந்து கொண்டுள்ளது.

04.12.2020 அன்று சீனா உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ள படமொன்றில், சந்திரனில் சீன தேசியக்கொடி நாட்டப்பட்டுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளதை BBC செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சந்திரனில் நாட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் சீனக்கொடி, 1969 ஆம் ஆண்டில், அமெரிக்கா சந்திரனில் நாட்டியதாக சொல்லப்படும் கொடி போலல்லாமல், வித்தியாசமான வடிவமைப்பை கொண்டதாகவும் விளங்குகிறது.

ஏற்கெனவே இருமுறை சீனாவின் விண்ணோடங்கள் சந்திரனில் தரையிறங்கியிருந்தாலும், சீனக்கொடி சந்திரனில் நாட்டப்பட்டுள்ளமை இதுவே முதல்முறையாகும். எனினும், அமெரிக்கா 1969 இலிருந்து 1972 ஆம் ஆண்டுகால பகுதியில் இதுவரை 5 அமெரிக்க கொடிகளை சந்திரனில் நாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2022 ஆண்டளவில், சந்திரனில் நிலையான ஆய்வகமொன்றை நிறுவும் நோக்கோடு, வருடாந்தம் பல பில்லியன் தொகையான பணத்தை சீனா செலவு செய்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள