சுமத்திரன் பேசியது மன்னிக்கமுடியாத தவறு!

You are currently viewing சுமத்திரன் பேசியது மன்னிக்கமுடியாத தவறு!

ஒட்டு மொத்த ஆயுதப் போராட்டத்தையும் தவறு என்று ஊடகம் ஒன்றிற்கு சுமந்திரன் கருத்து தெரிவித்துள்ளமை மன்னிக்க முடியாத தவறு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“ஆயுதப் போராட்டத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்தை பணிய வைத்து அரசியல் ரீதியாக பேசுவதற்கான ஓர் அங்கீகாரமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இப்படியான கருத்துக்களை சொல்வதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அவருடைய கருத்தை வன்மையாக கண்டிக்கின்றோம் ஆயுதப் போராட்டத்தில் பொதுமக்கள், போராளிகள் ஒட்டு மொத்தமாக உயிரை அர்ப்பணித்து உள்ளார்கள்.

ஆயுதப் போராட்டத்தின் ஊடாகத்தான் உலகளாவிய ரீதியில் எங்களுடைய இனப்பிரச்சினை வரலாறாக பதியப்பட்டுள்ளது. ஆயுதப் போராட்டத்தின் ஊடாகத்தான் இனப்பிரச்சினை சார்ந்த விடயங்களை இன்றைக்கு இலங்கை அரசாங்கத்துடன் பேசும் ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது.

இந்த ஆயுதப் போராட்டத்தின் ஊடாகத் தான், எமது இனப்பிரச்சினை தொடர்பான முக்கிய விடயங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அந்த வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாவதற்கு காரணமான நோக்கத்தை தனது கருத்தின் ஊடாக எம்.ஏ.சுமந்திரன் சீர் குலைத்துள்ளார்.

தமிழரசுக் கட்சி அவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழரசுக் கட்சி நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் தமிழிழ விடுதலை இயக்கம் இந்த விடயத்தில் நிச்சயமாக ஒரு சரியான முடிவை எடுக்கும்.” என்றும், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள