தமிழ்த்தேசியக்கட்சிகளின் கூட்டிணைவு வரைபால் பிதற்றும் சிங்களம்!

You are currently viewing தமிழ்த்தேசியக்கட்சிகளின் கூட்டிணைவு வரைபால் பிதற்றும் சிங்களம்!


“இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன் நிறுத்த வேண்டும் என்று மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகள் அனுப்பிவைத்துள்ள யோசனை வரைபை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகள் அடியோடு நிராகரித்து அதைத் தூக்கிவீச வேண்டும்.”

– இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு வலியுறுத்தியுள்ளது

‘இலங்கையை இனப்படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கும் வேறு பொருத்தமானதும் செயற்படுத்தக்கூடியதுமான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கும் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐ. நா. பொதுச்சபை, ஐ. நா. பாதுகாப்புச் சபை போன்றவை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய தீர்மானத்தில் உறுப்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும்’ என்று மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரிள்ளமை தொடர்பில் இலங்கை அரசின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கட்சிகள் மூன்றும் அரசுக்கு எதிராக சர்வதேச ரீதியில் சதி வேலைகளில் களமிறங்கியுள்ளன.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களான சம்பந்தன், விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகிய மூவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்துகொண்டு என்ன துணிவுடன் இவ்வாறு செயற்படுகின்றார்கள் என்று எமக்குத் தெரியவில்லை.

எனினும், அரசியலில் அனுபவம் மிகுந்த இவர்கள் இவ்வாறு செயற்படுவது அருவருக்கத்தக்கது.

இலங்கையில் இனப்படுகொலையோ அல்லது போர்க்குற்றங்களோ இடம்பெறவில்லை. இவ்வாறான நிலையில் இந்தப் பொய்க்குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை எப்படி நிறுத்த முடியும்?

சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை இலங்கை அரசு எந்தச் சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளாது.

ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ஐ.நா. தீர்மானங்களின் இணை அனுசரணையிலிருந்து இலங்கை அரசு விலகியுள்ள நிலையில், புதிய பிரேரணை மூலம் எம்மை எவரும் அச்சுறுத்த முடியாது.

ஐ. நா. பொதுச்சபையிலும், ஐ. நா. பாதுகாப்புச் சபையிலும் இலங்கையை இறுக்க எமக்கு ஆதரவு வழங்கும் உறுப்பு நாடுகள் இடமளிக்கா.

இலங்கை, சர்வதேச அரங்கில் பலம் இழந்த நாடு அல்ல. இது பலம் பொருந்திய நாடு. எமது நாட்டின் இறையாண்மைக்கு சர்வதேச நாடுகள் மதிப்பு வழங்கும். எம்முடன் எந்த நாடும் இதுவரை முட்டிமோதவில்லை. நாமும் எந்த நாட்டையும் பகைக்கவில்லை.

எனவே, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன் நிறுத்த வேண்டும் என்று மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகள் அனுப்பிவைத்துள்ள யோசனை வரைபை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகள் அடியோடு நிராகரிக்க வேண்டும். அந்த யோசனை வரைபைத் தூக்கிவீச வேண்டும்” – என்றார்.

பகிர்ந்துகொள்ள