இதோ
எம் குழந்தை
அம்மணியின் ஆட்சியில்
அடித்து
சித்திரவதையால்
துடித்து
படுகொலை
செய்யப்பட்டு
செம்மணியில்
புதைக்கப்பட்டு
இரு தசாப்தங்கள்
கடந்து
வெறும் எலும்புக்கூடாய்
வெளி வருகிறது!
மனிதநேயம் பேசும்
மகான்கள் எங்கே போயினர்
சிறுவர் நலன் பேசும்
காப்பகங்கள்
காணமல் போய்விட்டனவா?
ஐயகோ
இவ்வுலகில்
எம் குழந்தை
தமிழாக பிறந்ததை தவிர
என்ன தவறிழைத்தது!
வாழவேண்டிய வயதில்
இனவெறிப்பூதங்களின்
பசிக்கு பாழாய்ப்போனதே
தாயும் சேயும்
எலும்புக்கூடுகளாய்
மண்ணின் மார்பகத்துக்குள்
மாண்டுபோன
மரண வேதனையை
யார்தான் அறிவாரோ?
ஏய் நீதித்தாயே
வெளியே வா
இன்னுமா
உறங்கிக்கிடக்கிறாய்!
தமிழின அழிப்பின்
சாட்சிகளாய்
காட்சிப்படுத்தப்படும்
எம்மின எச்சங்களை
கண்டுமா
உன் கண்கள் இன்னும்
இருளாகிக்கிடக்கிறது!
உன் அமைதியை கலைத்து
மனிதத்தின் நீதிக்காய்
வெளியே வா!







