பல்லக்கு தூக்க அனுமதி ? ஈழத்தமிழர் நினைவேந்தலுக்கு தடையா? – திருமுருகன் காந்தி!

You are currently viewing பல்லக்கு தூக்க அனுமதி ? ஈழத்தமிழர் நினைவேந்தலுக்கு தடையா? – திருமுருகன் காந்தி!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், பல்லக்கு தூக்குவதற்கு அனுமதியளிக்கும் திமுக அரசு, ஈழத்தமிழருக்கான நினைவேந்தலுக்கு மட்டும் தடை விதிப்பதாக திருமுருகன் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, “2009 ஆம் ஆண்டில் மே 17, 18, 19 ஆகிய 3 நாட்களில் மட்டும் 70,000க்கும் அதிகமான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது சர்வதேச விசாரணை ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இத்தனை லட்சம் மக்களை படுகொலை செய்தவர்களை தண்டிக்க வேண்டும், ஈழத் தமிழர்களின் தனிநாடு கோரிக்கை நிறைவேற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆண்டுதோறும் நினைவேந்தலை நடத்தி வருகிறோம்.

முதல்வர் ஸ்டாலினால் நெகிழ்ந்துபோன இலங்கை பிரதமர்.. “உங்க அன்புக்கு நன்றி இந்திய மக்களே” என ட்வீட்!

கடந்த ஆண்டுகளில் பெண்கள், குழந்தைகள் உட்பட 10,000க்கும் மேற்பட்டவர்கள் அமைதியான முறையில் நீர்நிலைகளில் கூடி நினைவேந்தலை நடத்தி வருகிறோம். கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இது தடுக்கப்பட்டு, தடையை மீறி நினைவேந்தல் நடத்தியவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. 2020, 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா காரணமாக நாங்கள் அதை நடத்தவில்லை.

இம்முறை மெரினாவில் நினைவேந்தலை நாம் நடத்த காவல்துறையிடம் கோரிக்கை வைத்திருந்தோம். போலீசார் பெசண்ட் நகரில் இடம் ஒதுக்கித் தந்தார்கள். இதற்கான தயாரிப்பு பணிகளில் நாம் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று காலை திடீரென அனுமதி மறுத்துள்ளார்கள். இது அதிர்ச்சியளிக்கிறது. படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு நினைவேந்தல் நடத்துவது அடிப்படை உரிமை. இது பண்பாட்டு நிகழ்வு.

தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு நினைவேந்தல் நடத்தக்கூட உரிமை இல்லையா என்ற கேள்வி எழுகிறது. கடந்த அதிமுக அரசு எடுத்த நிலைபாட்டைட் திமுக அரசு எடுத்திருக்கிறது என்பது ஜனநாயக விரோதமானது. இப்படியான தடையை திமுக அரசு கொண்டு வரும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இதுபோன்ற தடையை விதிப்பது மனித உரிமை மீறல்.

இலங்கை முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்களோடு சிங்களர்களும் நினைவேந்துகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் முடியவில்லை. இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துவதால் என்ன நெருக்கடி உங்களுக்கு ஏற்படப்போகிறது என்ற கேள்வியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் எழுப்புகிறேன். தமிழ்நாடு அரசே அனைத்து கட்சிகளுடன் இணைந்து இதை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.

கடந்த அதிமுக அரசு இதுபோன்ற உரிமைகளை தடுத்ததால்தான் அந்த அரசை வீழ்த்தி இந்த அரசை கொண்டு வந்துள்ளோம். ஆனால், இந்த அரசும் இதை செய்ய அனுமதி மறுக்கிறது. இந்திய அரசு சொல்வதை தமிழ்நாடு அரசு அப்படியே ஏற்றுக்கொண்டுவிட்டதா? ஈழம் குறித்த நிலைபாட்டை முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். தடையை மீறி நினைவேந்தலை நடத்துவோம். வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்தாலும் கவலை இல்லை.

இனி ஆட்சியில் இருப்பவர்கள் தமிழர்களை பாதுகாப்போம் என்று பேச வேண்டாம். எடப்பாடி அரசு மோடி அரசை கண்டு அஞ்சியதால் தமிழர் உரிமையை முடக்கியது. நாங்கள் மோடி அரசை கண்டு அஞ்சவில்லை என்று சொல்லும் திமுக அரசுக்கு இந்த நிகழ்வை நடத்துவதால் என்ன சிக்கல். கொடுத்த அனுமதியை ஏன் ரத்து செய்தீர்கள்? இதற்கான நியாயமான காரணத்தை முதலமைச்சர் சொல்லட்டும்.

இதே மெரினாவில் இந்து முன்னணி விநாயகர் சதுர்த்தியன்று சிலைகளை கரைப்பதற்கு இதே அரசு அனுமதி அளிக்கிறது. அதை சாதாரண மக்கள் கறைக்கவில்லை. இந்துத்துவ அமைப்புகள் செய்கின்றன. எங்களைபோல் அவர்களுக்கும் திமுக அரசு தடை விதிக்குமா? நீங்கள் பல்லக்கு தூக்குவதற்கு அனுமதியளிக்கிறீர்கள். அமைச்சர்கள் சாலையில் நடக்க முடியாது என்று சொன்ன ஜீயரை சரிசமமாக அமர வைத்து பேசுகிறார்கள்.

அந்த ஜீயரை கைது செய்தீர்களா? ஜீயருக்கு மரியாதை கிடைக்கிறது. மக்களுக்காக போராடக்கூடிய பெரியாரிய, திராவிட கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களை மதிக்காமல் அழைத்துப் பேசாமல் போராட்டத்தை தடுக்கிறது திமுக அரசு. பாஜகவுக்கு திமுக அரசு அடிபணிந்து செல்வதாகதான் நாங்கள் பார்க்கிறோம்” என்றார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments