இணையவழி சூதாட்டத்தால் இளைஞர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேற்கு மாம்பலம் நாகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காந்திராஜா (24). இவர், வேளச்சேரி பகுதியில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக காந்திராஜா ஆன்-லைன் சூதாட்டத்தில் ஆர்வம் காட்டிவந்துள்ளார். தொடக்கத்தில் லாபம் பெற்ற அவர் பின்நாட்களில் பணத்தை இழக்கத் தொடங்கினார்.
அந்த வகையில் இணையவழி சூதாட்டத்தில் அவர் சுமார் ரூ.2 லட்சம் வரை இழந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் காந்திராஜா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இரவில் மின்விசிறியின் கொக்கியில் கயிறு மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது அவரது வீட்டுக்கு தண்ணீர் போத்தல் போட வந்த நபர், நீண்டநேரம் தட்டியும் கதவை திறக்காததால், சாளரம் வழியாக வீட்டுக்குள் எட்டிப்பார்த்தார். அங்கு காந்திராஜா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அக்கம்பக்கத்தினரிடம் கூறினார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த குமரன் நகர் காவல்துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்று காந்திராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இணையவழி சூதாட்டத்தால் இளைஞர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.