யாழ்ப்பாண அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட 13,500 கோடி ரூபாவுக்கு என்ன நேர்ந்தது?

You are currently viewing யாழ்ப்பாண அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட 13,500 கோடி ரூபாவுக்கு என்ன நேர்ந்தது?

யாழ்ப்பாணம் நகர அபிவிருத்தி தந்திரோபாய திட்டத்துக்காக 2016 ஆம் ஆண்டு 13,500 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது. இந்த நிதி என்ன நேர்ந்தது என்னவென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு ஆகிய அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபை பெரிய நீலாவணை பகுதியில் ஸ்லாமிக் ரிலீப்,செஞ்சிலுவை சங்கம்,கொபரேஷன் தொடர்மாடி வீட்டுத் திட்டம் என மூன்று வீட்டுத்திட்டங்கள் உள்ளன.

இந்த குடியிருப்புகளில் மக்கள் வாழ முடியாத நிலை காணப்படுகிறது.குடியிருப்பு தொகுதியில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் சாதகமான தீர்வு கிடைக்கவில்லை.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் வீதி அபிவிருத்தி மிக மோசமான நிலையில் காணப்படுகிறது.

திருகோணமலை மூதூர் கட்டைப்பறிச்சான் பாலம் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது.ஆகவே இந்த பாலம் உடனடியாக புனரமைக்கப்பட வேண்டும்.அதேபோல் திருகோணமலை தென்னைமரவாடி அக்கரை வீதியும் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

திருகோணமலை வெருகல் புன்னையடி பகுதியில் குறுக்கு பாலம் ஒன்று அமைக்க 47 மில்லியன் ரூபா அவசியம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விளாத்தியடி பகுதியில் பாலம் ஒன்று அமைப்பதற்கு 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை – முல்லைத்தீவு பகுதிக்கு இணைப்பு பாலம் ஒன்றை அமைப்பதற்கும், சந்திவெளி பாலம்,நரிப்புல் தோட்ட பாலம்,ரன்மடு பாலம், ஆகியன அமைக்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஆனால் இதுவரை அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மண்டூர் பாலத்தை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது,அதற்கு பின்னர் ஏதும் இடம்பெறவில்லை.

பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளுக்காக பணிகள் இவ்வாறு மந்த கதியில் உள்ளதால் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணம் நகர அபிவிருத்தி திட்டத்துக்காக 2016 ஆம் ஆண்டு 13,500 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது.இதற்கான மாதிரி திட்டத்தை தயாரிக்கும் பொறுப்பு கொழும்பில் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கப்பட்டது.

நகர அபிவிருத்தி அதிகார சபை இத்திட்டத்தை ஒரு தனியார் நிறுவனத்துக்கு வழங்கியது.அதற்காக 2020 ஆம் ஆண்டு 1770 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.

இந்த தந்திரோபாய அபிவிருத்தி திட்டத்தில் யாழ்ப்பாண பிரதேச சபையும், நகர அபிவிருத்தி சபையும் உள்வாங்கப்படவில்லை.

யாழ்.நகர அபிவிருத்தி திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 13,500 கோடிக்கு என்னவாயிற்று என்பதை அறியவில்லை.அபிவிருத்தியும் இல்லை,நிதியும் இல்லை.இந்த மோசடி தொடர்பில் நான் 2020,2021.மற்றும் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட உரையின் போது சுட்டிக்காட்டினேன்,தற்போதும் சுட்டிக்காட்டுகிறேன்.

யாழ்ப்பாணத்தில் எவ்வித திட்டமிடலும் இல்லாத வகையில் மக்கள் அபிவிருத்தி கட்டுமான பணிகளை முன்னெடுக்கிறார்கள்.இதனால் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகள் தோற்றம் பெறும்,கொழும்பு மற்றும் கோட்டை நகர சபைகளில் உள்ள கட்டுமான அபிவிருத்தி திட்டமிடல் பிரிவு சகல உள்ளூராட்சி மன்றங்களில் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments