ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு செல்ல குடிமக்களுக்கு தடை விதித்த தெற்காசிய நாடு!

You are currently viewing ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு செல்ல குடிமக்களுக்கு தடை விதித்த தெற்காசிய நாடு!

வேலை காரணமாக உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு குடிமக்கள் செல்வதை நேபாள அரசாங்கம் தடை விதித்துள்ளது. ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட சென்ற நேபாள இளைஞர்களில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் டசின் கணக்கானோர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில், அங்குள்ள அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.

2022ல் உக்ரைன் மீதான படையெடுப்பை ரஷ்யா துவங்கியதில் இருந்து 200க்கும் மேற்பட்ட நேபாள இளைஞர்கள் ரஷ்யாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் தற்போது மாயமாகியுள்ளதாக நேபாள வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி, மிக குறைவான எண்ணிக்கையிலான இளைஞர்கள் உக்ரைனுக்கு ஆதரவாகவும் போரிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சாத்தியமான அபாயங்களைக் குறைப்பதற்கு மேலதிக ஏற்பாடுகள் செய்யப்படும் வரை ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கான பணி அனுமதிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்று நேபாள அரசாங்கத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார்.

10 பேர்கள் கொல்லப்பட்டுள்ள தகவல் வெளியான நிலையில், இரு நாடுகளுக்கும் ஆதரவாக நேபாள இளைஞர்கள் களமிறங்க வேண்டாம் என்ற கோரிக்கை வலுத்தது. மேலும் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்கள் நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும், உரிய இழப்பீடும் அளிக்கப்பட்ட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

நேபாள வீரர்கள் பிரித்தானியா மற்றும் இந்தியப் படைகளில் பல தலைமுறைகளாகப் போரிட்டுள்ளனர், கூர்க்கா பிரிவுகள் முக்கியமாக காலாட்படை மற்றும் சிறப்புப் பிரிவுகளில் பணியாற்றியுள்ளன.

அத்துடன், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடந்த போர்களின் போது ஆயிரக்கணக்கான நேபாளிகள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் பாதுகாப்புக் காவலர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.

ஆனால் சமீபத்திய மாதங்களில் நேபாள இளைஞர்கள் சட்டவிரோதமாக ரஷ்யா பயணப்படுவது அதிகரித்து வந்தது. 9000 அமெரிக்க டொலர் கட்டணம் செலுத்தி சுமார் 200 நேபாள இளைஞர்கள் ரஷ்யாவுக்கு புறப்பட இருந்தது முறியடிக்கப்பட்டதுடன், தொடர்புடைய 12 பேர்கள் கைது செய்யப்பட்டனர்.

சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு செல்வதுடன், அங்குள்ள அதிகாரிகள் முன்னிலையில் ராணுவத்தில் இணைவதும் இவர்களின் திட்டமாக இருந்துள்ளது.

இதனிடையே வெளிநாட்டவர்கள் உக்ரைனுக்கு எதிராக போரிட தயாரானால் குடியுரிமை வழங்க தயார் என விளாடிமிர் புடின் அறிவித்த ஒரு நாளுக்கு பின்னர் நேபாள அரசாங்கம் குடிமக்களுக்கு தடை விதித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments