சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் பணிபுரியும் 700-க்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று 6 வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த போராட்டத்திற்கு கலந்து கொண்டார். அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அமர்ந்து அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்.
அப்போது பேசிய அவர், “அரசு உங்கள் உழைப்பை, தனியார் நிறுவன வருமானத்திற்கு தாரைவார்க்கப் பார்க்கிறது. தொடர்ச்சியாக போராடுவோம். உங்கள் போராட்டத்திற்கு எப்போதும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்” என்றார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “நாம், தூய்மை இந்தியாவை பற்றி பேசுகிறோம். ஆனால், தூய்மைப் பணியாளர்கள் நிரந்தர பணி இல்லாமல் அவஸ்தைப்படுகின்றனர். தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சம்பள உயர்வு கேட்கவில்லை; பணி உயர்வு தான் கேட்கிறார்கள். தமிழக அரசு இதை காலம் கடத்தி போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யாமல், உடனடியாக அழைத்து பேசி தீர்வு காண வேண்டும்.
அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் வெற்றி பெற்றது பேரறிவாளன் தான், அவரே சட்டங்களை படித்து, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து இந்த வழக்கை முடித்து வென்றுள்ளார். மற்ற யாரும் இதற்கு காரணம் இல்லை.
400 கோடி ரூபாய் பீரங்கி ஊழல், இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி ஒரு இனத்தையே அழித்தது என்று பல விஷயங்கள செய்துள்ள ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா..?
ராகுல் காந்தி தனது தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை மன்னித்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார்; ஆனால், அவர் யார் எங்களை மன்னிக்க..? நாங்கள் தான் உங்களை மன்னித்தோம்” எனக் கூறினார்.