விதைத்தவர்கள் உறங்கலாம்! விதைகள் உறங்காது!!

You are currently viewing விதைத்தவர்கள் உறங்கலாம்! விதைகள் உறங்காது!!

விதைத்தவர்கள் உறங்கலாம்! விதைகள் உறங்காது!!

தமிழீழத் தமிழர்களின் அறச்சீற்றத்திற்குள்ளாகியிருந்த போர்க்குற்றவாளி ராஜிவ்காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சின்னச்சாந்தன் சாவடைந்தார் என்ற செய்தி தமிழ்மக்களை 1980 களை நோக்கி செல்ல வைத்து விட்டது.

தேசியத்தலைவர் மேதகு பிரபாகரனின் சிந்தனையை முழுமையாக உள்வாங்கிய இன்றைய தமிழினம் தன்னெழுச்சியாக எழுந்து நிற்கிறது. சாந்தனின் இறுதி ஊர்வலத்தை ஒரு மாபெரும் வீரவணக்க நிகழ்வு போல உணர்வு பூர்வமாக பேரெழுச்சியுடன் செய்து முடித்துள்ளது.

இந்நிகழ்வு சொல்லும் செய்தி என்ன? யார் இவர்களிற்கு கட்டளையிட்டது? அலைகடலென வல்வெட்டித்துறை தீருவிலில் திரண்ட மக்களை யார் அழைத்தது.

இதே தீருவிலில்தான் ராஜிவ்காந்தியின் அரசின் நயவஞ்சகத்தால் சயனைட் அருந்தி வீரச்சாவடைந்த புலேந்திரன் குமரப்பா உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் வித்துடல்களிற்கு எமது போராளிகள் தீமூட்டினார்.

அதே தீருவிலில் ஆயிரக்கணக்கான மக்களை ஒன்று திரட்டிய சிந்தனை எது.

உலக வல்லாதிக்கங்களும், ஏகாதிபத்தியங்களும் பிராந்திய வல்லரசும் நுணுக்கமாக பார்க்க வேண்டிய விடயமிதுவாகும். இவ்வளவு பேரெழுச்சியும் எங்கு மறைந்து கிடந்தது. தன்னெழுச்சியென்பது இதுதான், இந்த இனம் தொடர்ந்து போராடும்.

போர்களிலே நாம் தோல்வி கண்டிருக்கலாம் ஆனால் போராட்டத்தில் வென்றே தீருவோம் என உங்கள் முகத்தில் அறைந்து சொல்லியிருக்கிறார்கள் . இன்னும் புரியவில்லையா உங்களிற்கு? விதைத்தவர்கள் உறங்கினாலும் விதைகள் உறங்காது முளைவிடும் அது விருட்சமாகும் வரை நீர்பாய்ச்சிக் காத்திருப்போம் எனக் கட்டியம்கூறி நிற்கிறார்கள் .

சின்னச்சாந்தன் இலட்சிய வேட்கையுடன் நடந்து திரிந்த பாதைகளால் உயிரற்ற வித்துடலாக ஊர்தியில் பவனி வருகிறான் தான் நேசித்த மக்களை 35 ஆண்டுகளின் பின்னர் பார்க்க வருகின்றான் என்றெல்லாம் மக்கள் பேசுகிறார்கள் , உலகத்தமிழினமே உங்களிற்குப் தெரிகிறதா இவன் யாரென்று. இறுதிவணக்க நிகழ்விலே ஒலித்த பாடல் வாய்விட்டுப் பேர்சொல்லி அழமுடியாது என ஒலித்தது அப்போது 18 வயது நிரம்பிய ஒரு பெண்பிள்ளை தனது தாயைக் கேட்கிறது ஏன் அம்மா அழுறீங்க இவர் எங்களிற்குச் சொந்தமா என்று, அம்மா தேம்பித்தேம்பி அழுகிறா பதிலேதும் சொல்லாமல் .

தாயழுவதைப்பார்த்து மகளும் அழுகிறாள் விடையேதும் புரியாமல். இதுதான் பிரபாகரன் சிந்தனை that is one man army அழிக்கவும் முடியாது அசைக்கவும் முடியாது இனி ஒரு flach back பார்ப்போமா?

தமிழீழ விடுதலைப் போராட்டம் உச்சங்களைத் தொட்ட போதெல்லாம் , தென்னாசியப் பிராந்திய வல்லரசு தனது வலிய கரங்களைக் கொண்டு நசுக்கத் தவறவில்லை. அப்படித்தான் 1987 இல் சிறிலங்கா அரசின் ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழர்மீது வலிந்து போர் தொடுத்தது. சிங்கள பௌத்த பேரினவாதி ஜே.ஆர் ஜெயவர்த்தனா வகுத்த தமிழீழம் மீதான ஆக்கிரமிப்பு மூலோபாயத்தின் பிரகாரம் இந்தப்படைநகர்வு ஆரம்பமாகியது. தமிழீழ விடுதலைப்புலிகளின் கடுமையான மறிப்புச்சமர் உக்கிரமாக நடைபெற்றது.

இதில் பல புலிமறவர்கள் வீரகாவியமாகினர். ஈற்றில் வடமராட்சியில் நெல்லியடி மத்தியமகா வித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் மீது உயிராயுதமாக கரும்புலி கப்டன் மில்லர் அவர்கள் வெடிமருந்து நிரப்பிய ஊர்தியில் சென்று வெடித்துச் சிதறி வீரகாவியமானார். இத்தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட சிறிலங்கா ஆக்கிரமிப்புப் படையினர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலிற்குப் பின்னர் சிறிலங்கா இராணுவமே அஞ்சி ஒடுங்கியது. யாழ்நர் முழுவதும் இராணுவ நிலைப்பு கேள்விக்குறியாகியது.

எந்நேரமும் புலிகள் சிங்களப் படைநிலைகளைத் தாக்கிக் கைப்பற்றலாம் என்ற பதட்ட நிலை சிங்களத்தலைமைகளிற்கு விளங்கியது. விடுதலைப்புலிகளின் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ளப் பயந்த சிறிலங்கா அரசுத்தலைவர் ஜே,ஆர்.ஜெயவர்த்தனா இந்திய அரசுத்தலைவர் ராஜீவ்காந்தியின் காலடியில் வீழ்ந்தார்.

அதன்பின்னர் நடந்த சம்பவங்கள் யாவும் உங்களனைவருக்கும் தெரியும். இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஜே,ஆரும் ராஜீவும் கையெழுத்திட்டனர். ஒப்பந்தத்தின் பின்னர் ஈழத்தமிழரைக் காக்கவென தமிழீழத்திற்கு வந்திறங்கிய இந்தியப்படையினர் அமைதிப்படையென வந்திறங்கி ஆக்கிரமிப்புப் படையாக உருமாற்றம் பெற்றனர். தமிழீழ விடுதலைப்போராட்டத்தை நசுக்க அல்லது அழிக்க சிறிலங்காவுடன் இணைந்து சதிவலைப்பின்னல்களை உருவாக்கிச் செயற்பட்டனர்.

ராஜீவ்காந்தியின் வழிநடத்தலில் தமிழீழம் வந்த இந்தியப்படையினர் வகைதொகையின்றி, தமிழீழ மக்களைக் கொன்று குவித்தனர். கொத்துக்கொத்தாக படுகொலைகளைப் புரிந்தனர். பல்லாயிரக்கணக்கான தமிழீழப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினர். ராஜிவ்காந்தி ஏவிவிட்ட பாரதப்படைகள் எதிரியை விடவும் மோசமாக எமது மக்களைக் கொன்று குவித்தனர். ஆக மொத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றுகுவித்த போர்க்குற்றவாளிகளிற்கு தலைமை தாங்கிய கட்டளைப் பொறுப்பாளர் ராஜிவ்காந்தி.

காலங்கள் கடந்தோடி ராஜிவ்காந்தி பதவியிழக்கிறார். உதவிக்கு வாருங்கள் என அழைத்த சிறிலங்கா அரசே காலால் உதைக்காத குறையாக கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறது. இது வரலாறு சொல்லும் கதை, பாடம் இந்தியாவிற்கானது. அக்காலப்பகுதியில் ராஜிவ்காந்தியின் படையினரால் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டுக் குற்றியிரும் குலையுயிருமாகக் காப்பாற்றப்பட்ட பெண்கள் ஏராளம்.

அவர்களும் நடைப்பிணமாக தமிழீழமெங்கும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். தமிழீழப்பெண்கள் ஆண்கள் மத்தியில் , இந்திய ஆக்கிரமிப்புப் படையினர்மீது ஒரு அறச்சீற்றம் குடிகொண்டிருந்தது.

பதிவியிழந்த , போர்க்குற்றவாளி ராஜிவ்காந்தி இந்தியாவின் சிறிபெரும்புதூரில் தனு என்ற தமிழ்ப்பெண்ணால், தன்னில் பொருத்தியிருந்த குண்டை வெடிக்க வைத்து கொல்லப்பட்டார்.

இதில் தனு என்ற பெண்ணும் உயிரிழந்தார் என்று இந்திய உளவுத்துறையின் விசாரணைப்பிரிவு சொல்கிறது ராஜிவ்காந்தியின் இறப்பின் பின்னர் பல அப்பாவித் தமிழ், இளையோர்கள் இந்திய, தமிழக உளவுப்பிரிவினரால் கைது செய்யப்படுகின்றனர்.

கடும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு அரசசார்பு வழக்கிற்கு இசைவாக அச்சுறுத்தி வாக்குமூலங்கள் பெறப்பட்டுக் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு, திட்டமிட்டபடி வழக்குகள் முடிவுக்கு வருகின்றன. இந்தக் கைது நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்தான் தில்லையம்பலம் சுதேந்திரராஜா என்னும் சாந்தன்.

இவர் அறிவியல் கற்கவென தமிழகம் சென்றநிலையில் கைதுசெய்யப்பட்டார். 32 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதைக்குட்பட்டு, நோய்வாய்ப்பட்ட நிலையில் இந்திய உச்சநீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.

தனது இறுதிக்காலத்தில் தாயாருடன் வாழ விரும்பி சாந்தன், உரிமைகள் மறுக்கப்பட்டு திருச்சி சிறப்புமுகாம் என்னும் சிறைக்கூடத்தில் மீண்டும் அடைக்கப்பட்டார். திருச்சி சிறப்பு முகாமில் போதிய மருத்துவ வசதிகளின்றி தவித்த சாந்தன் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

சாந்தனின் தாயாரும் அவரை ஒருதடவையாவது பார்த்து விடவேண்டும் எனத் துடித்து ஏங்கினார். தனது கையால் ஒரு வாய் சோறு ஊட்ட வேண்டும் . ஒரு தேநீர் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டார். தனது தாயின் மடியில் தலைசாய்த்து ஓர்நாளாவது உறங்கவேண்டும் எனச் சாந்தனும் ஏங்கினார்.

எல்லாம் நிரைசையாகிப் போனது மகன் வருவான் என தனது மங்கிய கண்ணொளியால் படலையைப்பார்த்தபடி தாய் காத்திருந்தாள். ஆனால் அவனது உயிரற்ற உடலைமட்டும் தான் அன்னையால் தொட்டுணர முடிந்தது. எமக்கான தேசம் எம்கைகளில் கிட்டும்வரை எமக்கு நாதியில்லை. ஆனால் எம்மிடமிருக்கும் போராயுதமான மேதகு பிரபாகரன் சிந்தனை எமக்கு வழிகாட்டும். இருண்ட வெளிகளில் ஒளிதேடி நீர் நடந்தீர், ஒளியற்ற இடங்களில் தீப்பிழம்பாக நீர் வெடித்துச்சிதறி எம்மினத்திற்கு ஒளிகொடுத்தீர். ஆண்டுகள் பல கடந்தாலும் உங்களிற்கு ஒளிவிளக்கேற்ற எங்கள் தேசம் காத்திருக்கும். அதுவரை உங்களிற்காகக் குனிந்த தலைகளை மீண்டும் நிமிர்த்திக் கொண்டு அண்ணன் முன்னே வழிகாட்டி நடக்க நாங்கள் பின்தொடர்கிறோம்…….

அனைத்துலகச் சிந்தனைப்பள்ளி

4 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments