விமலசேன விமலாவதி அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு!

You are currently viewing விமலசேன விமலாவதி அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு!

விமலசேன விமலாவதி அவர்களுக்கு

‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப்  பல்வேறு வழிகளிலும் செயலாற்றிய விமலசேன விமலாவதி அவர்கள், 06.12.2020 அன்று சுகவீனம் காரணமாகத் தாயகத்தில் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்திய இராணுவத்துடனான போர்க்காலம் தொடங்கி முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை வரையிலும் பெரும் இடர்களை எதிர்கொண்டு, மட்டக்களப்பு மாவட்டத்தில் இவர், தமிழ்மக்களின் விடுதலைக்காக  அயராது  பணியாற்றினார். தென்தமிழீழத்தை மையப்படுத்திய, எமது பல நடவடிக்கைகளில் விமலாவதி அம்மாவின் பங்களிப்பும் அடங்கியிருக்கின்றது.

மிக இக்கட்டான காலப்பகுதிகளில், அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொடுப்பது, விழுப்புண்ணடைந்த போராளிகளைப் பாதுகாப்பாக நகர்த்துவது, விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமான பல நகர்வுகளில் பங்காற்றியது என பல தளங்களில் தனது உயிரைத் துச்சமென மதித்துப் பணியாற்றிய வீரத்தாய் இவர்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னரும் தனது உயிரைப் பணயம் வைத்து போராளிகள் சிலரைப் பாதுகாத்து வெளியேற்றுவதில் அம்மாவின் பங்களிப்பு அளப்பரியது. இதற்காக, அவர் எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள் மிக அதிகம். எக்காலத்திலும் முழுமையாக வெளிப்படுத்த முடியாத பங்களிப்பைப் போராட்டத்திற்கு வழங்கிய விமலாவதி அம்மா, இன்று எம்மோடு இல்லை. இறுதி மூச்சுவரை தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக எத்தகைய அர்ப்பணிப்பையும் செய்யத்துணிந்தவராக  செயற்பட்டு வாழ்ந்தவர்.

தாயக விடுதலையையும் விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சியையும்  தனது கடமைகளாக வரித்துக்கொண்டு, பல்வேறு வழிகளில் உளப்பூர்வமாகப் பணியாற்றிய செயற்பாட்டாளர். இவரின்  இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் விமலசேன விமலாவதி அவர்களின் தேசியப்பணிக்காவும் விடுதலைப்பற்றிற்காகவும் “நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம். 

விமலசேன விமலாவதி அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு! 1
பகிர்ந்துகொள்ள