இஸ்ரேலிய விமானப் படை குண்டுவீச்சில் குழந்தைகள் உட்பட 21 பாலஸ்தீனர்கள் பலி!

You are currently viewing இஸ்ரேலிய விமானப் படை குண்டுவீச்சில் குழந்தைகள் உட்பட 21 பாலஸ்தீனர்கள் பலி!

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பகுதிக்குள் இஸ்ரேலிய விமானப் படை நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட குறைந்தது 21 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதி வளாகத்தில் கடந்த சனிக்கிழமை கூடியிருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலியப் படைகள் நடத்திய மூா்க்கத்தனமான தாக்குதலில் 300-க்கு மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்த நிலையில் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலை அடுத்து இஸ்ரேல் பகுதிகளை நோக்கி பாலஸ்தீன விடுதலைக்காக போராடும் ஹமாஸ் அமைப்பு ரொக்கட் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பாலஸ்தீன பகுதிகள் மீது இஸ்ரேல் விமானங்கள் நேற்று கண்மூடித்தனமான குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தியதில் குழந்தைகள் உட்பட 21 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் அல்-அக்சா மசூதியில் கூடிய பாலஸ்தீனர்கள் மீது திங்கட்கிழமை இஸ்ரேல் பொலிஸார் தாக்குதல் நடத்தியது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அல் அக்சா மசூதியில் ரம்ஜானை முன்னிட்டு தொழுகைக்காக சுமார் 90,000 பாலஸ்தீனர்கள் கூடியிருந்தபோது அங்கு வந்த இஸ்ரேல் காவல்த்துறையினர் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

கண்ணீர் புகை குண்டுகளை அவர்கள் மீது வீசினர். மசூதி உள்ளேயும் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. பொலிஸார் நடத்திய தாக்குதலில் 300-க்கு மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் இத்தாக்குதலைக் கண்டித்து அப்பகுதியில் பாலஸ்தீனர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அல் அக்சா மசூதி அருகே இஸ்ரேல் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

1967-இல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரம் என்று அந்நாடு அறிவித்தது. இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் எங்கள் தலைநகராக இருக்கும் என்று கூறிவருகின்றனர்.

பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. இந்த நிலையில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே மோதல் வலுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments