உக்ரைன் மீது படையெடுக்கும் ரஷ்யாவின் முயற்சி பேரழிவை ஏற்படுத்தும் – பைடன் எச்சரிக்கை!

You are currently viewing உக்ரைன் மீது படையெடுக்கும் ரஷ்யாவின் முயற்சி பேரழிவை ஏற்படுத்தும் – பைடன் எச்சரிக்கை!

உக்ரைன் மீது விரைவில் படையெடுத்து அந்த நாட்டைக் கைப்பற்ற ரஷ்யா முனையும் எனக் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அவ்வாறான நடவடிக்கை ரஷ்யாவுக்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.

வெள்ளை மாளிகையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் மாநாட்டில் இவ்வாறு பைடன் எச்சரிக்கை விடுத்தார்.

எனினும், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அதற்கு எத்தகைய பதில் நடவடிக்கை எடுக்கும்? என அவர் தெளிவுபடுத்தவில்லை.

உக்ரைன் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய ஜனாதிபதி புடின் ஈடுபடுவார் என்பதே எனது கணிப்பு. ஆனால் இந்த நடவடிக்கை ரஷ்யாவுக்கு பேரழிவுகளை ஏற்படுத்தும் என பைடன் கூறினார்.

எனினும் உக்ரைன் மீது படையெடுக்க தயாராகி வருவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை ரஷ்ய அதிகாரிகள் மீண்டும் மீண்டும் மறுத்து வருகின்றனர்.

ஆனால் உக்ரைனின் எல்லைகளுக்கு அருகே சுமார் 100,000 துருப்புக்களை ரஷ்யா குவித்துள்ளது.

இது நேட்டோ கூட்டணியில் உக்ரைன் இணைவதை தடுத்து நிறுத்தும் வகையில் அந்த நாட்டின் மீது போர் தொடுப்பதற்கான ஏற்பாடு என மேற்கு நாடுகள் குற்றஞ்சாட்டுகின்றன.

இந்நிலையில் ரஷ்ய இராணுவம் உக்ரைனுக்குள் நுழைந்தால் அமெரிக்கா உள்ளிட்ட கூட்டணி நாடுகளின் ஒன்றிணைந்த பதிலடியை ரஷ்யா எதிர்கொள்ளும் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறினார்.

இதேவேளை, உக்ரைன் மீது படையெடுத்து அந்நாட்டை ரஷ்யா கைப்பற்ற முயன்றால் ரஷ்யா மீது பரந்த பொருளாதார தடைகளை உடனடியாக விதிப்பதற்கான திட்டங்களை பைடன் நிர்வாகம் வகுத்துள்ளது.

இவ்வாறான தடையால் ரஷ்ய நிறுவனங்கள் அமெரிக்க டொலரைப் பயன்படுத்தும் திறனை இழக்கக்கூடும் எனவும் ஜென் சாகி தெரிவித்தார்.

இதேவேளை, உக்ரைன் ஒருபோதும் நேட்டோ கூட்டணியில் இணையாது. அத்துடன், உக்ரேனிய மண்ணில் அணு ஆயுதங்கள் நிலைகள் நிலைநிறுத்தப்படாது என்ற உத்தரவாதங்களை தன்னிடம் புடின் கோரியதாக ஜோ பைடன் நேற்று தெரிவித்தார்.

உக்ரைன் விரைவில் நேட்டோ கூட்டணியில் சேருவதற்கான வாய்ப்புகள் குறைவு. அத்துடன், உக்ரைனில் மேற்கு நாடுகள் அணு சக்தி நிலைகளை நிலைநிறுத்தும் திட்டங்களை கொண்டிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் ரஷ்யாவின் நடத்தைகளை பொறுத்தே இந்த விவகாரங்களின் முடிவுகள் அமைப்பும் எனவும் பைடன் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையே உக்ரைனுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அண்டனி பிளிங்கன் அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.

இதேவேளை, உக்ரைனை நேட்டோ கூட்டணியில் இணைக்கும் முயற்சிகளை நிறுத்துதல் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து கூட்டணிப் படைகள் திரும்பப் பெறுதல் உட்பட கோரிக்கைகள் தொடர்பில் அமெரிக்காவின் எழுத்துபூர்வ உத்தரவாதத்துக்காக ரஷ்யா காத்திருப்பதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை விநியோகிப்பது, உக்ரைனை மையமாகக் கொண்டு இடம்பெறும் இராணுவ சூழ்ச்சிகள் மற்றும் உக்ரைனில் நேட்டோ கூட்டணிப் படைகளின் அதிகரித்த தலையீடுகளே தற்போதைய பதற்றங்களுக்குக் காரணம் என ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments