சாந்தனின் மரணத்துக்கு இந்திய, தமிழக அரசுகளே பொறுப்பு!

You are currently viewing சாந்தனின் மரணத்துக்கு இந்திய, தமிழக அரசுகளே பொறுப்பு!

சாந்தனின் மரணத்துக்கு தமிழக அரசையும் இந்திய அரசையும் குற்றம்சாட்ட வேண்டியுள்ளது என சாந்தனின் சட்டத்தரணியாக செயற்பட்ட புகழேந்தி பாண்டியன் யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.

“சாந்தன் இலங்கைக்கு வந்து தாயை பார்க்க முடியாமல் போனமைக்கு இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகளே பொறுப்பு. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன் தன்னுடைய கடவுச்சீட்டை ஒரு முறைக்கூட பார்க்கவில்லை. கடவுச்சீட்டின் புகைப்பட பிரதி மட்டுமே அவருக்கு காண்பிக்கப்பட்டது.

சாந்தன் உயிரிழந்த பின்னர் அந்த கடவுச்சீட்டு நேரடியாக தூதரகத்தில் கையளிக்கப்பட்டதாகவும், அதன் பின்னரே தமது தரப்பினர் பெற்றுக்கொண்டதாகவும்” அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜீவ் காந்தியை கொலை வழக்கில் உள்ளவர்களை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவை ஆளக் கூடிய எல்லா அரசியல் கட்சிகளுக்கும் உண்டு. தமிழக அரசியல்வாதிகளை தாண்டி அனைவரும் இவர்களின் விடுதலைக்கு எதிராகவே இருந்தனர்.

தமிழ் உணர்வாளர்கள் மீதான பயத்தின் காரணமாகவே இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசியல்வாதிகள் ஏற்றுக்கொண்டனர்.

ஈழத் தமிழர்கள் விடயத்தில் இந்தியா இரட்டை வேடமிடுகின்றது. உண்மையில் இந்திய மத்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்யவில்லை என்பது என்னுடைய குற்றச்சாட்டு.

இனியும் உதவிச் செய்யாது. விடுதலைப் புலிகள் இல்லையென்பது இந்திய அரசின் நிலைப்பாடு, ஆனால் அந்த அமைப்பை மீள உருவாக்க முயற்சிப்பதாக கூறி வழக்கு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து இந்தியாவுக்கு வந்த போதைப் பொருள் கடத்தல் காரர்கள், ராஜபக்சவின் கட்சியை சேர்ந்த சிங்களவர்கள், ரணிலின் கட்சியை சேர்ந்த சிங்களவர்கள், சில முஸ்லிம்கள், தமிழ் பேசக் கூடிய சில முஸ்லிம்கள் எல்லோரும் சேர்ந்து விடுதலைப் புலிகளை மீள உருவாக்க திட்டமிட்டார்கள் என்று அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு டெல்லியில் பதிவுசெய்யப்பட்ட இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு இன்றும் நிலுவையில் உள்ளது. விடுதலைப் புலிகள் என்றப் பெயரில் இந்தியாவில் உள்ள தமிழர்களையும், இலங்கையிலிருந்து வந்த தமிழர்களையும் ஒடுக்குவதே நோக்கிலேயே இந்திய அரசின் எண்ணமாகும்.

இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு ஒருபோதும் உதவாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments