தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் இளைஞனாக இருந்த பொழுது எழுதிய தத்துவக் கட்டுரை – கடவுளும் மனிதனும்!

You are currently viewing தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் இளைஞனாக இருந்த பொழுது எழுதிய தத்துவக் கட்டுரை – கடவுளும் மனிதனும்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் இளைஞனாக இருந்த பொழுது தேசத்தில் குரல் அன்ரன் பாலசிங்கம் எழுதிய தத்துவக் கட்டுரையை வெளியிடுகின்றோம்.

1977ஆம் ஆண்டு ஆனி மாதம் தாயகத்தில் இருந்து வெளிவந்த சிரித்திரன் இதழில் கடவுளும் மனிதனும் என்ற தலைப்பில், பிரம்மஞானி என்ற புனைபெயரில் இக்கட்டுரையை பாலா அண்ணை எழுதியிருந்தார்.

இக் கட்டுரையை எழுதிய பொழுது குரல் பாலா அண்ணை இலண்டனில் வசித்து வந்தார். தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த பொழுதும், அப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அவர் இணைந்திருக்கவில்லை.

சிரித்திரன் இதழின் ஆசிரியர் மாமனிதர் சிரித்திரன் சுந்தர் (சி.சிவஞானசுந்தரம்) அவர்களின் நெருங்கிய நண்பராக விளங்கிய பாலா அண்ணை, தனது இளமைக் காலத்தின் இருபதுகளில் சிரித்திரன் இதழில் பிரம்மஞானி என்ற புனைபெயரில் பல்வேறு தத்துவக் கட்டுரைகளை வெளியிட்டதோடு, சிறுகதைகள், ஆசிரியர் தலையங்கம் போன்றவற்றையும் எழுதினார்.

பின்னர் வீரகேசரி பத்திரிகையின் உப ஆசிரியராகப் பதவி வகித்த அவர், அதன் பின் கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் ஊடகப் பிரிவில் பணிபுரிந்ததோடு, தனது பணிக்காலம் நிறைவுற்றதும் பிரித்தானிய அரசாங்கத்தின் அனுசரணையில் பிரித்தானியாவிற்குப் புலம்பெயர்ந்தார்.

பிரித்தானியாவிற்குப் புலம்பெயர்ந்த பொழுதும் தாயகத்தில் சிரித்திரன் சுந்தர் அவர்களுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்த பாலா அண்ணை, இடையிடையே பிரம்மஞானி என்ற பெயரில் ஆக்கங்களை வெளியிட்டார்.

அவ்வாறு அவரால் எழுதப்பட்ட கடவுள் மறுப்புக் கட்டுரையை காலத்தின் தேவை கருதி அன்ரன் பாலசிங்கம் இணையக் காப்பகம் வெளியிட்டுள்ளது.

மூட நம்பிக்கைகளில் இருந்து வெளிவந்து, தமது சுய சிந்தனையின் அடிப்படையில் மக்கள் செயற்பட வேண்டும் என்ற தனது விருப்பின் வெளிப்பாடாக இக்கட்டுரையை பாலா அண்ணை எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கட்டுரையின் முழுவடிவம்:

கடவுளும் மனிதனும்

புத்தர் மகான் நிஷ்டையிலிருந்து விழித்துக் கொள்கிறார். அவர் முன்பாக ஒரு தாய் தலைவிரி கோலமாக நிற்கிறாள். இறந்து போன தனது புதல்வனின் பிணத்தைக் கையில் ஏந்தியவாறு.

தனது புதல்வனுக்குப் புத்துயிர் கொடுத்து, தனது துயரத்தைத் துடைத்து விடும்படி அவள் மன்றாடினாள். கருணை வள்ளல் அவளிடம் சென்னார், “பெண்ணே உனது கிராமத்திற்குப் போய், அங்குள்ள ஒவ்வொரு வீடாகச் சென்று, சாவு நிகழாத வீட்டிலிருந்து ஒரு மிளகு வாங்கி வா,” என்று.

அவளும் அப்படியே அந்தக் கிராமத்திற்குச் சென்று, வீடு வீடாக அலைந்து விசாரித்தாள். ஒவ்வொரு வீட்டிலும் சாவு சதி செய்திருந்தது. சாவு எவரையும் விட்டு வைப்பதில்லை. கிழண்டும் வரை காத்திருப்பதில்லை. காலப் புயற்காற்று ஓயாமல் அடிக்கிறது. வாழ்க்கை மரத்தில் மனித இலைகள் சிதறிப் பறக்கின்றன. பிஞ்சாய், பச்சையாய், பழுத்ததாய் ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு சோகத்தைச் சொன்னார்கள். அவளுக்கு அப்போது தான் வெளிச்சம் ஏற்பட்டது. சாவின் நிதர்சனத் தோற்றத்தைக் கண்டு கொண்டாள்.

அவள் திரும்பி வந்தாள், வெறும் கையுடன். உண்மை நிலையை உணர்ந்து கொண்டதால் அவள் அற்புதத்தைக் கேட்கவில்லை.

அறிவைக் கொண்டு உலகத்தை அறிந்து கொள்பவனுக்கு அற்புதங்கள் தேவையில்லை. அவன் அதிசயங்களை நாடுவதில்லை. அறிவொளியில், அந்த மெஞ்ஞான வெளிச்சத்தில் அவனுக்குத் தெளிவான உலகாதர்சனம் கிட்டுகிறது.

அறிவைப் பாவியாதவர்களுக்கு, அறியாமையில் முடங்கிக் கிடப்பவர்களுக்கு அற்புதம் தேவைப்படுகிறது. இயற்கைக்கு அப்பால், பிரபஞ்ச நியதிகளுக்கு அப்பால், வாழ்வின் ஜதார்த்த நிலைக்கு அப்பால், ஏதோவொரு தெய்வீக ஆட்சி நடைபெறுவதாக எண்ணி அவர்கள் அற்புதத்தைக் கேட்கிறார்கள். வாழ்க்கையில் தோல்வி ஏற்படும் சமயம், வாழ்வின் அழுத்தங்கள் திணறடிக்கும் சமயம் இவர்கள் அறிவை நாடுவதில்லை. அற்புதத்தைத் தேடுகிறார்கள். வாழ்க்கையில் எழும் சவால்களை எதிர்நோக்கத் திராணியற்று மனமானது பயந்து, பதட்டப்படும் சமயங்களில் இவர்களுக்கு மாயாஜாலம் தேவைப்படுகிறது, மந்திர சக்திகள் தேவைப்படுகின்றன. யாகம் செய்து, பூசை செய்து, பிரார்த்தனை செய்து, வாழ்க்கையில் அற்புதங்களை நிகழ்த்தப் பார்க்கிறார்கள். எமக்கு எதிராக, எம்மைச் சூழ, எம்மைச் சதா அழுத்தும் இந்த நிஜமான மனிதவுலகத்தை மறந்து, மனிதானுபவத்தைத் துறந்து, தேவர்கள், தேவதைகள், பூதங்கள், பிசாசுகள் நிறைந்த ஒரு இருண்ட பேயுகத்தில் இவர்களது மனமானது விமோசனம் பெற விழைகிறது.

நாம் விழித்துக் கொண்டு கனவு காண்கிறோம். வானத்தின் சூன்யத்தில் கடவுள் வதிகிறார், வரங்களை வழங்குவார், கொடைகளைக் கொட்டுவார் என்று. முகட்டைப் பிய்த்துக் கொண்டு புதையல் விழப் போகிறது எனக் காத்திருப்பவன் போல, அற்புதங்களை நாடும் அசட்டு நம்பிக்கை எம்மை விட்டு இன்னும் அகன்றுவிடவில்லை.

புராதன மனிதனுக்கு இந்த உலகம் புதிராகத் தோன்றியது. ஆகாயத்திலும், பூமியிலும் நடைபெறும் இயற்கையின் செப்படி வித்தைகளை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. பூமியைச் சுற்றி ஒழித்து விளையாடும் சூரியன், பகலைச் சதா துரத்தி வரும் இரவு, செத்துச் செத்துப் பிறக்கும் சந்திரன். பூமியை நடுங்க வைக்கும் பூகம்பம், வானத்தைப் பிளக்கும் மின்னல் பேரிடி, பெருமழை, பேய்க்காற்று இவையெல்லாம் அவனுக்கு வியப்பாகவும், விபரீதமாகவும் தோன்றின. ஏதோ பிரமாண்டமான சக்திகள் தன்னை ஆட்டிப் படைப்பதாக ஆதிமனிதன் பயந்தான். அவனது பயத்திலிருந்து பிசாசுகள் பிறந்தன. தேவர்கள், தேவதைகள் தோன்றினர். ஜட உலகத்தில் தெய்வீகம் புகுந்தது. நதிகள், மலைகள், விருட்சங்கள், விலங்குகள், சூரியன், சந்திரன், காற்று, மழை எல்லாவற்றிலும் தெய்வங்கள் குடிபுகுந்து கொண்டன. அறியாமையினால் ஆதிமனிதன் அற்புதங்களை நாடினான். தெய்வங்களிடம் தஞ்சம் புகுந்து தேறுதல் பெற விழைந்தான்.

காலப்போக்கில் காட்டுமனிதன் நாடு அமைத்து நாகரீகமடைய, இயற்கையின் இரகசியங்கள் அவனுக்குப் புலப்படத் தொடங்கியது. இந்தப் புதிய விழிப்பில் புராதன வழிபாடுகள் பல மடிந்து போயின. இயற்கையின் இயல்புகளாய் இயங்கி வந்த எண்ணற்ற தெய்வங்கள் பூமியிலிருந்து விரட்டப்பட்டன. புராதன நம்பிக்கைகள் சிதைய அவற்றின் புதைகுழியிலிருந்து புதிய மதங்களை மனிதன் கட்டி எழுப்பினான். மனித உருவில், மனிதனின் உன்னதவடிவமாய் மகத்தான சக்திகள் கொண்டதாய் ஒன்றையும் படைத்தன். தனது ஏலாமை, பலவீனம், அர்த்தமின்மையை ஏற்றுக் கொள்ள விரும்பாத மனிதன், தனது வாழ்விற்கு அற்புதமான அர்த்தத்தைக் கொடுக்கும் அதைப் படைத்தான். தனக்கு எட்டாத இயல்புகளை, கிட்டாத ஆசைகளை அதைக் கொண்டு பூர்த்தி செய்ய விரும்பினான்.

பூமியில் நடைபெறும் மனித நாடகத்திற்கு இந்தக் கடவுள் தானாம் இயக்குநர். “விதியென்ற முடிவிலா பெருங்கதையில் நாமெல்லாம் சிறு நாடக பாத்திரங்கள்; வந்து வந்து நடித்து விட்டுப் போகின்றோம். எம்மைச் சாவு தீண்டுவதில்லை. உடல்களை உடையாக உரிந்து விட்டுச் செல்கிறோம். பிறப்பு, இறப்புச் சக்கரத்திலிருந்து விடுபட்டதும் எமக்கு ஆன்மீக விடுதலை கிட்டும். தெய்வீக சமுத்திரத்தில் சங்கமமாவோம். இந்தப் பூமியில் எமக்கு விமோசனம் இல்லை. மனித வாழ்க்கை என்பது பெரியதொரு மனோமாயை. இந்த வாழ்க்கையைத் துறந்தால் விடிவிற்கு வழி பிறக்கும்.” எமது மதமானது இப்படியொரு விபரீதமான புராணக் கதையைப் புனைந்து விட்டிருக்கிறது. இந்தப் பெரிய பொய்யில், இந்த அசட்டுக் கனவில் சிறைபட்டுக் கிடக்கும் மனித மனதை நாம் விடுதலை செய்ய வேண்டும். ஆகாயத்தில் ஆண்டவனை நோக்கித் திசைதெரியாது திரிபவர்களைப் பூமியை நோக்கித் திசை திருப்ப வேண்டும். வானத்தின் வெறுமையிலல்ல, பூமியில் தான் எமது சுவர்க்கம் இருக்கிறது.

அறியாமை என்ற தூக்கத்திலிருந்து நாம் இன்னும் விழித்துக் கொள்ளவில்லை. கனவுகளின் இனிய சொப்பனங்களில் மனித மனமானது நிறைவுகொள்ளப் பார்க்கிறது. வாழ்க்கையை கனவாக்கி அர்த்தமற்றதாக்கி விட்டுக் கனவை வாழ்க்கையாக்கி அர்த்தம் காண விழைகிறோம்.

கடவுள் என்பதை நாம் தேடுவதை விடுத்து மனிதன் யார் என்பதை முதலில் கண்டறிய வேண்டும். மனிதன் என்பவன் வானத்திலிருந்து விழவில்லை. பூமியின் புழுதியிலிருந்து பிரசவித்தவன். மனித விதியை மனிதனுக்கு மீறிய சக்திகள் நிச்சயிப்பதில்லை. மனிதன் தன்விதியைத் தானே, தன் சிந்தனையால், செயலால் நிர்ணயிக்கிறான்.

நீச்சே என்ற தத்துவஞானியின் எழுத்திலிருந்து ஒரு சுவையான பகுதியை இங்கு சுருக்கித் தருகிறேன்.

சராதுஷ்ரன் தனது வனவாசத்தை முடித்துக் கொண்டு நாடு நோக்கி அந்த மலையிலிருந்து இறங்கி வருகிறான். மலையடிவாரத்திலுள்ள காட்டில் அந்த வயோதிப் துறவியைச் சந்தித்தான்.

“சராதுஷ்ரா, நீ தனிமையில் வாழ்ந்து தவத்தினால் ஞானமடைந்துள்ளாய், விழித்துவிட்டாய். கடலின் தனிமையிலிருந்து மீண்டும் ஏன் கரைக்குப் போகப் பார்க்கிறாய்? சதா தூக்கத்திலிருக்கும் மனிதர்களிடம் உனக்கு என்ன வேண்டியிருக்கிறது?” என்று கேட்டான் அந்தத் துறவி.

“நான் மனித குலத்தை நேசிப்பவன்,” என்றான் சராதுஷ்ரன்.

“நான் சமுதாயத்தைத் துறந்து ஏன் இந்தக் காட்டில் தஞ்சம் புகுந்திருக்கிறேன் தெரியுமா? நான் கடவுளை நேசிப்பவன். மனித சமுதாயத்தை அல்ல. மனிதன் தூய்மையற்றவன், ஒழுக்கமற்றவன். மனித குலம் மீதான உனது அன்பு உன்னை அழித்து விடும்,” என்றான் அந்த முனிவன்.

சராதுஷ்ரன் சொன்னான்: “நான் மனித குலத்திற்கு ஒரு நன்கொடையைக் கொண்டு செல்கிறேன்.”

“மனிதர்களை நாடிப் போகாதே. இந்தக் காட்டில் தங்கியிரு. மனிதர்களை விட இந்தக் காட்டு மிருகங்கள் மேலானவை. மிருகங்களை அண்டிப் போ. என்னைப் போல உன்னால் சீவிக்க முடியாதா? கரடிகளில் ஒரு கரடியாக, பறவைகளில் ஒரு பறவையாக?” என்றான் துறவி.

“முனிவரே இந்தக் காட்டில் இத்தனை காலமும் என்ன செய்து வருகிறீர்கள்?”

“நான் பாட்டுகள் இயற்றுவேன். பாடுவேன். நான் பாட்டுக்கள் புனைகையில், பாடுகையில், சிரிப்பேன், அழுவேன், எனக்குள் முணுமுணுப்பேன். இவ்வாறு நான் கடவுளைத் துதிக்கிறேன். எனது பாட்டில், சிரிப்பில், அழுகையில், முணுமுணுப்பில் நான் எனது கடவுளைப் போற்றிப் புகழுவேன். அது இருக்கட்டும், எமக்காக என்ன நன்கொடை கொண்டு வந்திருக்கிறாய்?” என்று கேட்டான் முனிவன்.

“நான் உங்களுக்கு எதையும் கொடுக்கவும் தேவையில்லை. உங்களிடமிருந்து நான் எதையும் பெறவும் தேவையில்லை,” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் சராதுஷ்ரன்.

மனிதன் பிறக்கிறான், இறக்கிறான். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே ஒரு குறுகிய இடைவெளி, காலத்தின் ஒரு துளி, வாழ்க்கையாக விரிகிறது. முடிவற்று, எல்லையற்றதாய் நகரும் கால விசாலத்தில் ஒரு கண வாழ்க்கை, காளான் வாழ்க்கை.

இதில் பாதிநேரம் தூக்கத்தில் நழுவுகிறது. மறுபாதியை விழித்தபடி தூங்கிக் கொன்று விடுகிறோம். மிஞ்சுவது என்ன? கனவுகள், நிஜமற்ற நினைவின் நிழல்கள். கடவுகள் என்ற கனவு. சுவர்க்கம் என்ற கனவு.

மனித வாழ்க்கை காலவெள்ளத்தில் அடிபட்டுச் செல்கிறது. மனிதனது இந்தக் கனவுகளோ சாகாது நிலைத்து விடுகின்றன. ஆதிதொட்டு, பரம்பரை பரம்பரையாக நிலைக்கும் கனவுகள். பிறந்த கணத்திலிருந்தே மனிதப் பிரக்ஞையை சாகடித்து விடும் கனவுகள்.

விவேகம்தான் மனிதனுக்கு விடிவைத் தரும். வெற்றியைத் தரும்.

சிந்திப்பவன்தான் கடவுள். சிருஷ்டிப்பவன்தான் கடவுள். அவன் கலைத்தொழிலாளியானால் என்ன, கமத்தொழிலாளியானால் என்ன? படைக்கும் மனிதன் எவனோ அவன்தான் கடவுள்.

ஒரு பைத்தியக்காரன் ஏதோ பிதற்றியடி அந்த வீதியால் வருகிறான். ஒரு சனக்கூட்டம் அவனை வேடிக்கை பார்த்தபடி நிற்கிறது. திடீரென அவன், அக்கூட்டத்திற்கு முன்னால் ஓடிச்சென்று ஆத்திரத்தில் கத்தினான், “விழியுங்கள், விழியுங்கள்,” என்று. எல்லோரும் சிரிக்கிறார்கள்.

நன்றி: www.antonbalasingham.com

பகிர்ந்துகொள்ள