பளையில் அடாத்தாக திருடப்படும் காணிகள்!

You are currently viewing பளையில் அடாத்தாக திருடப்படும் காணிகள்!

பளை பகுதியில் உள்ள எல்.ஆர்.சி காணிகள், தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாகவும், இது அப்பகுதியின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடாகும் என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சுங்க கட்டளை சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘யாழ்ப்பாணத்தில் கடந்த பல வாரங்களாக, நிரந்தர நியமனம் கோரி சுகாதாரத் தொண்டர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். சுகாதாரத் துறைக்கு சம்பந்தம் இல்லாத பலர், அரசியல் தலையீடு காரணமாக சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் பெற்றுள்ளனர்’ என்றார்

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஈ.பி.டி.பி.யும் ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்படுவதால் சுகாதாரத் தொண்டர்கள் பாதிக்கப்படுகின்றனர் எனத் தெரிவித்த அவர், அவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதன் ஊடாக மட்டுமே அவர்கள், இனிமேலும் பாதிக்கப்படமாட்டார்கள் என்றார்.

அத்துடன், வடக்கின் பளை பகுதியில் உள்ள காணிகள், குறித்த பிரதேச சபைக்கு உட்படாத தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்களுக்கு 5 ஏக்கர் வீதம் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த அவர், குறிப்பாக தென்னிலங்கையைச் சேர்ந்த பொலிஸாருக்கு நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இச்செயற்பாடு, அப்பகுதியின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடாகும் என்றார்.

பகிர்ந்துகொள்ள