வனவளத்திணைக்களத்திற்கு எதிராக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் மக்கள்!

You are currently viewing வனவளத்திணைக்களத்திற்கு எதிராக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் மக்கள்!

வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மருதோடை  கிராம அலுவலர் பிரிவில் காஞ்சூரமோட்டை கிராம மக்கள் தமக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய கோரி  ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று(26) 5 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது

பன்னெடுங்காலமாக குறித்த கிராமத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த மக்கள்   யுத்த சூழல் காரணமாக  குறித்த இடத்திலிருந்து இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களுக்கும் சென்று இருந்த நிலைமையில் மீண்டும் 2018 ஆம் ஆண்டு  இந்த பிரதேசத்தில் மீள் குடியேறி இன்று வரை தமது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் இதற்கு பிரதான காரணமாக வளவள திணைக்களம் காணப்படுவதாகவும் குற்றம் சுமத்தி தமக்கான நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்

இவர்கள் ஆரம்பித்த போராட்டமானது இன்று ஐந்தாவது நாளாக தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற நிலையிலும் இதுவரை தமக்கான எந்தவிதமான தீர்வுகளும் கிடைக்கவில்லை என  தெரிவிக்கின்ற மக்கள்  நாட்டினுடைய ஜனாதிபதி அவர்கள் மிக விரைவாக தங்களுடைய பிரச்சனைக்கு தீர்வுகளை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் அதேவேளை  தீர்வு கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் எனவும் தெரிவிக்கின்றனர்

மீள குடியேறிய காலம் முதல் தங்களுடைய பூர்வீக காணிகளை துப்பரவு செய்வதற்கு வளவள திணைக்களம் தடையாக இருப்பதாகவும் தாங்கள் காணிகளை துப்பரவு செய்கின்ற போது அல்லது அபிவிருத்தி வேலைகளை செய்கின்ற போது அவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைகளுக்கு  உட்படுத்துவதனால்  பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்

 குறிப்பாக குறித்த கிராமத்தில் தங்களுடைய காணிகளை துப்பரவு செய்ய முடியாத நிலை காணப்படுவதோடு தங்களுடைய பிரதான வாழ்வாதார தொழிலாக விவசாயத்தை மேற்கொள்ள முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதோடு  அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலும் காணப்படுகின்றார்கள் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டபோதும் வீட்டுத் திட்டங்கள் முழுமையாக அதற்கான நிதிகள் தொடர்ச்சியாக கிடைக்கப் பெறாத பட்சத்தில் தங்களுடைய கிராமத்தை அபிவிருத்தி வேலைகளை செய்ய முடியாத திண்டாட்டத்தில் மக்கள் இருக்கின்றனர்

 குறிப்பாக இந்த கிராமத்திற்கான மின் இணைப்புகளும் இதுவரை வழங்கப்படாத நிலையில் மின்சார சபையினர் மின் இணைப்புகளை வழங்குவதற்கு வீதியோரத்தில் இருக்கின்ற 14 மரங்களை வெட்ட  வேண்டிய சூழ்நிலை காணப்படுவதாகவும் இந்த 14 மரங்களை வெட்டி  தங்களுடைய பகுதிக்கு மின்னிணைப்பு கொண்டுவருவதற்கு வனவள திணைக்களம்  முட்டுக்கட்டையாக இருப்பதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்

மின்கம்பங்கள்  கொண்டு வந்து இறக்கப்பட்டு  மிக நீண்ட காலமாக காத்திருக்கின்ற போதும் இதுவரை தமக்கான மின் இணைப்பு வழங்குவதற்கு வளவள  திணைக்களம் தொடர்ந்தும் தடை விதித்து வருகிறது இவ்வாறான சூழ்நிலையில் தங்களுடைய காணிகளில் தாங்கள் புனரமைப்பு பணிகளை செய்வதற்கு திணைக்களத்தினர் தடை விதிக்கக் கூடாது எனவும் உடனடியாக தமது கிராமத்திற்கான மின் இணைப்பு வழங்குவதற்கு தடையாக காணப்படுகின்ற 14 மரங்களைவெட்டி  மின் இணைப்புகளை வழங்குவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நாட்டினுடைய ஜனாதிபதி தங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்

தங்களுக்கான காணிகளுக்குரிய காணி உரிமைகள் வழங்கப்பட்டு தாங்கள் காணிகளை துப்பரவு செய்து தங்களுடைய தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்க வேண்டுமெனவும் அத்தோடு மின்னிணைப்பு கிடைக்க வேண்டும் இந்த இரண்டு கோரிக்கைகளையும் முன்வைத்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தங்களுக்கான இந்த இரண்டு பிரச்சினைகளுக்கான தீர்வுகழும்  இல்லாத பட்சத்தில் தங்களுடைய போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறும் என தெரிவித்துள்ளனர்

பகிர்ந்துகொள்ள