தூங்காத நினைவுகள்!

You are currently viewing தூங்காத நினைவுகள்!

அலைகிழித்து ஆளக்கடலில் வலைவீசி
உலைவைத்தோம்!
வலையிழுத்து வயிற்றுப்
பசி தீர்த்தோம்!

மாலை மயங்கும் வேளையில்
உன் நீலமேனியில்
கண்துயிலாக் கனவோடு
கயல் பிடித்து
காலைக்கதிரவனின்
துணையோடு
கரைவந்து சேரும் வரை
காத்திருப்பாள் மனைவி!

காற்றுக்கறுப்பு தீண்டுமோ
பெரும் மீன்வந்து விழுங்குமோ
கடற்படையின் கந்தகம்
வந்து குதறுமோ
அடர்ந்த நினைவுகளோடு
உடல் முழுதும் நடுக்கத்தில்
நனைய
கடற்கரையிலே கண்ணீரோடு நிற்பாள்
அம்மா!

ஆனாலும்

வானும் கடலும் காதலாகி
அன்பொழுகும் ஆனந்தம்!
தேனும் பாலுமாய் பருகித்
திளைக்கும் பரவசம்!

இப்படித்தான்
மீனும் கடலும்போல
மீனவனும் கடலும்
தாயும் பிள்ளையுமாய்
தாலாட்டில் உறங்குவார்!
வகிடெடுக்கும் வாடைக்காற்றிலும்
சோழகக்காற்றிலும்
திளைப்பார்!

எப்படி?
எல்லாம் முடிந்தது!!
ஒரு விடிகாலைப்பொழுதில்
அழகிய ரம்மியமான வேளையில்
விடியலை விழுங்கிய
இரவாய்
எப்படி நடந்தது?

இரவியே இடிந்து வீழ்ந்து
கருக்கிய உடலங்களாய்
எப்படி?
கருங்கடலால் முடிந்தது!

கருணையுள்ளமாய்
உயிரைக்காத்தவளின்
உடல் ஏன்?
மனிதப்பிணங்களை
கேட்டது!

ஐயகோ
இன்னும் இதயம்
நம்ப மறுக்கிறது
அலைகளின் தாலாட்டில்
உறங்கிய குருவிகளின்
இறக்கைகள் கிழிந்து
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
இறந்து கிடந்த
கனத்த நினைவுகள்
இன்னும் கண்ணைவிட்டு
அகலவில்லை…

✍தூயவன்

பகிர்ந்துகொள்ள