நாளை முதல் யேர்மன் நாட்டின் சிறப்பு நுழைவு விதிக்குள் சுவிஸ்வாழ் மக்கள் !

You are currently viewing நாளை முதல் யேர்மன் நாட்டின் சிறப்பு நுழைவு விதிக்குள் சுவிஸ்வாழ் மக்கள் !

யேர்மன் அரசு விடுத்த அறவித்தலின்படி போலந்து நாட்டுடன், சுவிற்சர்லாந்து நாடுமுழுவதையும், அவுஸ்திரியாவின் பெரும்பான்மை பிரதேசத்தையும், இத்தாலியின் ஒரு பெரும்பகுதியையும் எதிர்வரும் 24. 10. 2020 முதல்நோய்ப் பெருந்தொற்றுக்கு நிரலில் யேர்மனி சேர்த்துள்ளது.

இதன் பொருள் யேர்மன் நாட்டுக்குள் நுழைய குறிக்கப்பட்ட நாட்டவர்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றது.

சுவிசிலிருந்து யேர்மனுக்குள் நுழைவோர் கீழ்க்காணும் விதிகளை ஒழுக வேண்டும்:

மகுடநுண்ணியிரித் (கொறோனா) தொற்றற்றவர் எனும் சான்றினை யேர்மனிக்குள் நுழைவோர் கையளிக்க வேண்டும், இம் மருத்துவச் சான்று 48 மணிநேரத்திற்குள் மேற்ப்டதாக இருத்தல் ஆகாது அல்லது யேர்மனுக்குள் நுழைந்தவுடன் நேரடியாக 14 நாட்களுக்கு தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்விதிகளை யேர்மன் மாநிலங்கள் யேர்மன் அரசுடன் இணக்கமாகப் பேசி அறிவித்துள்ளன. இருப்பினும் சில விதிலக்குகள் உண்டு. யேர்மன் நாட்டின் «பாடன் வூற்ரென்பெர்க்» எல்லையில் அமைந்துள்ள சுவிஸ் எல்லை மாநிலங்கள்வாழ் பொதுமக்கள் 24 மணிநேரத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டு யேர்மனுக்குள் நுழையலாம்.

இவ்விதி 24. 10. 2020 சனிக்கிழமை அதாவது, 23.10.2020 வெள்ளிநள்ளிரவு 00.00 மணிமுதல் அமுலுக்கு வருகின்றது.

ஆனாலும் ஒருவர் யேர்மனுக்குள் நுழையலாமா இல்லையா எனும் இறுதி முடிவினை எல்லைச் சோதனையில் ஈடுபடும் அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுப்பர். மேலும் யேர்மனுக்குள் நுழைவோர், அந்த நாட்டின் ஒவ்வொரு மாநிலங்களும் அறிவித்திருக்கும் தனித்தன்மையான விதிகளை முழுமையாக ஒழுகவேண்டும் என்பதும் விதியாகும்.

குடும்பங்களுக்கான விதிகள்

யேர்மன் குடியுரிமை கொண்டவரது வாழ்க்கைத் துணை (கணவன், மனைவி, சட்டப்படியான வாழ்க்கைத் துணைவன், துணைவி) அல்லது 18 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகள் குடும்ப உறுப்பினர் எனும் அடிப்படையில் எத்தடையுமின்றி யேர்மனுக்குள் எப்போதும் நுழையலாம்.

ஒருவர் தனது குடும்ப உறுப்பினர் என்பதை உரிய சான்றுடன் (திருமணப் பதிவுச் சான்று, வாழ்க்கைத் துணைப்பதிவிதழ், பிறப்புச்சான்றிதழ், குடும்பநூல் அல்லது குடிவரவுத் திணைக்களப்பதிவுச்சான்று) எல்லையில் கையளித்து அதனை உறுதிப்படுத்த வேண்டும்.

நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் என்பதற்குள் உள்ளடக்கப்படாதோர்:

18 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகள்

18 குழந்தையின் பெற்றோர்

உடன் பிறப்புக்கள்

பேரன், பேத்தி

இவ்வாறு நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் எனும் வட்டத்திற்குள் உட்படாதோர் யேர்மனுக்குள் நுழைய வேண்டுமானால் 14 நாட்களுக்கு தம்மைத் தனிமைப்படுத்தி அல்லது 48 மணிநேரத்திற்கு உட்பட்ட கொறோனாத் தொற்றுநோய் இல்லை மருத்துவச் சான்றுடன் மட்டுமே நுழைய முடியும்.

இருப்பினும் மேலும் சில விதிவிலக்குகள் உண்டு, அவை: குழந்தை பிறப்பு, திருமணம், இறப்பு மற்றும் மரணச்சடங்கு என்பனவாகும்.

அதுபோல் யேர்மனுக்குள் வாழும் எவராவது கடுமையாக நோயுற்றிருப்பின், உறவினர் எனும் அடிப்படையில் அவருக்கு உதவ நீங்கள் யேர்மனுக்குள் நுழைய வேண்டி இருப்பின் விலக்கு அளிக்கப்டும்.

ஆனால் இவற்றை எல்லையில் நீங்கள் சான்றுகளுடன் உறுதிப்படுத்த வேண்டும். எடுத்துக் காட்டாக அழைப்பிதழ், மருத்துவரின் சாற்றிதழ் உரிய தகவலுடன், மருத்துவனை அல்லது மூதாளர் இல்லத்தின் சான்றிதழ் என்பன முன்வைக்கலாம்.

மணமாகாத இணையர்

வாழ்க்கைத் துணை (ஆண் அல்லது பெண்) யேர்மனியில் சட்டமுறையில் பதியப்பட்டு வாழ்ந்து கொண்டிருப்பின், அடிப்படையில் அவரிடம் செல்வதற்கு வாழ்க்கைத் துணைக்கு அனுமதி உண்டு.

கீழே உள்ள சான்று ஏதேனும் இருப்பினும் சுயதனிமைப்படுத்தல் விதியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்:

வாழ்க்கைத் துணையின் அழைப்பிதழ் அவரது அடையாள அட்டையின் நகலுடன்

வாழ்க்கைத் துணையின் தன்னிலை அறிக்கை எழுத்தில்

இணைந்து வாழ்வதற்கான சான்று அல்லது இதற்கு முன்னர் தனது வாழ்கைத் துணையை நேர்கண்ட சான்று

இருவரும் இணைந்து பயணம் செய்த கடவுச்சீட்டில் உள்ள உள்நுழைவு முத்திரைகள்

பழைய பயணச் சான்றுகள், மின்னுந்துப் பயணச்சீட்டு, இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட நிகழ்ப்படங்கள்

சமூகவலைத் தளத்தில் உள்ள பதிவுகள், இருவரும் பரிமாறிக்கொண்ட மின்னஞ்சல்கள் அல்லது மின்னரட்டைச் சான்றுகள்

மணமாகாத நிலையில் இருவரும் ஒன்றாக வெளிநாட்டில் வாழந்திருப்பின் அதில் ஒருவருக்கு யேர்மன் குடியுரிமை இருப்பினும் மேலுள்ள விதிவிலக்கு அளிக்கப்படும்.

தொகுப்பு: சிவமகிழி

பகிர்ந்துகொள்ள